இங்கிலாந்தில் இருந்து தமிழக கோவில் சிலைகள் மீட்பு: அதிகாரிகளுக்கு முதல்வர் எடப்பாடி பாராட்டு

வெள்ளிக்கிழமை, 20 நவம்பர் 2020      தமிழகம்
Edappadi 2020 11-16

Source: provided

சென்னை : இங்கிலாந்து அருங்காட்சியகத்தில் இருந்து தமிழக கோவில் சிலைகள் மீட்கப்பட்டுள்ளன. சிலைகளை மீட்டெடுத்த தமிழ்நாடு காவல்துறையின் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலர்களை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பாராட்டினார். 

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று  (20.11.2020) முகாம் அலுவலகத்தில், நாகப்பட்டினம் மாவட்டம், தரங்கம்பாடி வட்டம், அனந்தமங்கலம் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீராஜகோபால பெருமாள் திருக்கோயிலில் 1978-ம் ஆண்டு களவு போய், தமிழ்நாடு காவல்துறையின் சிலை கடத்தல் தடுப்பு பிரிவால் மீட்கப்பட்ட புராதான சிலைகளான இராமர், சீதை மற்றும் லட்சுமணன் சிலைகளை மீண்டும் அருள்மிகு ஸ்ரீராஜகோபால பெருமாள் கோயிலில் வைத்து வழிபடும் வகையில் அக்கோயிலின் செயல் அலுவலரிடம் ஒப்படைத்ததோடு, சிலைகளை மீட்ட தமிழ்நாடு காவல்துறையின் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலர்களுக்கு தனது பாராட்டுகளையும் தெரிவித்தார். 

நாகப்பட்டினம் மாவட்டம், தரங்கம்பாடி வட்டம், அனந்தமங்கலம் கிராமத்தில் விஜயநகர பேரரசு காலத்தில் கட்டப்பட்ட அருள்மிகு ஸ்ரீராஜகோபால பெருமாள் கோயில் அமைந்துள்ளது.  இலங்கையில் யுத்தம் முடிந்து இராமர் அயோத்தி திரும்பும் வழியில் இராவண அரக்கர்களின் வாரிசுகளான இரக்கபிந்து மற்றும் இரக்தராட்சகன் ஆகியோரை அழிக்க அனுமனை பணித்ததால்,  அனுமனும் தேவர்கள் வழங்கிய பத்து விதமான ஆயுதங்களுடன் சென்று அரக்கர்களுடன் போரிட்டு, அவர்களை அழித்து, அயோத்தி திரும்பும் வழியில் அனந்தமங்கலத்தில் போரில் வென்ற ஆனந்தத்துடன் இத்திருக்கோயிலில் காட்சி அளித்ததாக புராணங்களில் கூறப்படுகிறது. 

இக்கோயிலில் கடந்த 23.11.1978 அன்று  ராமர், சீதை, லட்சுமணர் மற்றும் அனுமர் சிலைகள் களவு போயின. தமிழ்நாடு காவல் துறையின்  சிலை கடத்தல் தடுப்பு பிரிவின் தீவிர முயற்சியால் ராமர், லட்சுமணன் மற்றும் சீதை சிலைகள் லண்டனில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தமிழ்நாடு அரசின் வழிகாட்டுதலின்படி, இச்சிலைகள் லண்டனில் உள்ள இந்திய தூதரகத்திடம் ஒப்படைக்கப்பட்டு, பின்னர் புதுடெல்லியில் உள்ள இந்திய தொல்லியல் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. மீட்கப்பட்ட இப்புராதான சாமி சிலைகளை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று பார்வையிட்டு, இச்சிலைகளை அருள்மிகு ஸ்ரீராஜகோபால பெருமாள் கோயிலில் மீண்டும் வைத்து வழிபடும் வகையில், அக்கோயிலின் செயல் அலுவலரிடம் ஒப்படைத்தார். 

மேலும், 42 ஆண்டுகளுக்கு முன் களவு போன புராதான சாமி சிலைகளை கண்டெடுக்க கடும் முயற்சி மேற்கொண்டு, மீட்டெடுத்த தமிழ்நாடு காவல்துறையின் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலர்களை தமிழக முதல்வர் பாராட்டினார்.  

இந்த நிகழ்வின்போது, அமைச்சர் சேவூர் எஸ். இராமச்சந்திரன், தலைமைச் செயலாளர் சண்முகம், உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கே. பிரபாகர், காவல்துறை தலைமை இயக்குநர் திரிபாதி, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் விக்ரம் கபூர், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் டாக்டர் எஸ். பிரபாகர், காவல்துறை கூடுதல் இயக்குநர் (சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு) அபய் குமார் சிங், காவல்துறை தலைவர் (சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு), அன்பு மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து