முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஊழலை பற்றி பேசுவதற்கு தி.மு.க.வுக்கு என்ன அருகதை இருக்கிறது: சென்னை விழாவில் அமித்ஷா காட்டமான கேள்வி

ஞாயிற்றுக்கிழமை, 22 நவம்பர் 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : ஊழலை பற்றி பேச தி.மு.க. வுக்கு என்ன அருகதை இருக்கிறது என்று கேள்வி எழுப்பிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, குடும்ப அரசியல் நடத்தியவர்களுக்கு தமிழ்நாட்டிலும் மக்கள் பாடம் புகட்டுவார்கள் என்றும் தெரிவித்தார். 

மன்னிப்பு கேட்ட அமித்ஷா

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று சென்னை வந்தார். சென்னைக்கு குடிநீர் வழங்கும் 5-வது நீர்த்தேக்கத்தை துவக்கி வைத்த அவர் பல்வேறு திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டினார். பின்னர் இந்த விழாவில் அவர் பேசுகையில், தமிழ் மொழி தொன்மையான மொழி. அதில் என்னால் உரையாற்ற முடியவில்லை. அதற்காக மன்னிப்பு கோருகிறேன் என்று கூறி தனது பேச்சை துவக்கினார். 

தொடர்ந்து பேசிய அவர், முதல்வர் எடப்பாடி, துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் ஆகியோர் தலைமையில் தமிழகம் முன்னேற்றம் கண்டுள்ளது. மறைந்த முதல்வர் அம்மாவின் வழிகாட்டுதல்படி இந்த ஆட்சி சிறப்பாக தொடரும் என்று நம்பிக்கை தெரிவித்தார். 

கோவிட்டுக்கு எதிரான போராட்டம்

கோவிட் - 19 எனப்படும் கொரோனா நோய்க்கு எதிராக போர் நடத்தி வருகிறோம். இந்த போர் பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் வெற்றி கண்டுள்ளது. வளர்ந்த நாடுகளை விட இந்தியா சிறப்பாக செயல்பட்டுள்ளது. 130 கோடி மக்களும் போராடி வருகிறார்கள் என்று பெருமையோடு குறிப்பிட்டார். கோவிட்டுக்கு எதிரான போராட்டத்தை தமிழக முதல்வரும், துணை முதல்வரும் சிறப்பாக நடத்தியதற்கு தனது பாராட்டுகளையும் அமித்ஷா தெரிவித்தார். மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் மீட்பு விகிதம் சிறப்பாக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். இந்த காலகட்டத்தில் கர்ப்பிணிகள், சிசுக்கள் பராமரிப்பு நாடு முழுவதும் நடைபெற்றது. ஆனால் மற்ற மாநிலத்தை விட தமிழ்நாட்டில் நல்ல முறையில் பராமரிக்கப்பட்டது என்று அவர் புகழாரம் சூட்டினார். 

அனைத்து திட்டங்களிலும் தமிழகம் முதல் நிலை வகிக்கிறது என்று கூறிய அமித்ஷா, நீர் பாதுகாப்பு, நீர் விநியோகம் ஆகியவற்றில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது என்றும் பாராட்டினார். நாடு முழுவதும் விவசாயிகளின் நலனுக்காக பிரதமர் மோடி அரசு 3 வகையான சீர்திருத்தங்களை கொண்டு வந்தது. அதற்கு தமிழகம் நல்ல முறையில் ஆதரவு தந்தது. இதனால் விவசாயிகள் சிறப்படைவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார். 

மத்திய அரசின் சாதனைகள்

ஏழைகளுக்காக மத்திய அரசு பல நல்ல திட்டங்களை கொண்டு வந்துள்ளது என்று கூறிய அவர், ஜல்தன் திட்டத்தில் இடைத்தரகர்களே இல்லை என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டார். இலவச எரிவாயு திட்டத்தின் மூலம் 13 கோடி குடும்பங்கள் பயன்பெற்றுள்ளன என்று கூறிய அவர், நாடு முழுவதும் கழிவறை வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்றும் குறிப்பிட்டார். அனைவருக்கும் வீடு திட்டம் 2022-ம் ஆண்டுக்குள் நிறைவேற்றப்படும் என்றும் அவர் உறுதியளித்தார். விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் நேரடியாக ரூ. 6 ஆயிரம் மத்திய அரசால் செலுத்தப்பட்டது என கூறிய அமித்ஷா, 10 ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் என்ன செய்தார்கள் என்றும் கேள்வி எழுப்பினார். தமிழகத்தில் 45 லட்சம் விவசாயிகளுக்கு வங்கி கணக்கில் பணம் செலுத்தப்பட்டுள்ளது என்றும் கூறிய அவர், தமிழக மக்களுக்கு தோளோடு தோள் கொடுப்போம் என்றும் உறுதி கூறினார். தமிழகத்திற்கு வந்திருக்கும் நான் அரசியல் பேசப் போகிறேன் என்றும் கூறிய அவர், தமிழகத்திற்கு அநீதி இழைத்து விட்டதாக  சிலர் குற்றம் சாட்டுகிறார்கள். இவர்கள் 10 ஆண்டு காலம் மத்திய ஆட்சியில் இருந்த போது என்ன செய்தார்கள் என்று பட்டியலிட முடியுமா என்று தி.மு.க.வுக்கு சவால் விடுத்தார். மேலும் சென்னையில் சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு எம்.ஜி.ஆர். பெயர் சூட்டியது மோடி அரசு. கோவிட் நோயை கட்டுப்படுத்த 4,500 கோடி ரூபாய் மற்றும் நவதானியங்களை வழங்கியது மோடி அரசு என்றும் தங்கள் ஆட்சியின் சாதனைகளை பட்டியலிட்டார். குடும்ப அரசியல் நடத்தியவர்களுக்கு கடந்த தேர்தலில் மக்கள் பாடம் புகட்டினார்கள். அதே போல தமிழகத்திலும் வரப்போகும் தேர்தலில் குடும்ப அரசியல் நடத்தியவர்களுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள் என்றும் அமித்ஷா தெரிவித்தார். 

தி.மு.க.வுக்கு என்ன அருகதை

ஊழலை பற்றி பேச  தி.மு.க.வுக்கு என்ன அருகதை இருக்கிறது என்று காட்டமாக கேள்வி எழுப்பிய அமித்ஷா, உங்கள் குடும்பத்தை சற்று திரும்பி பாருங்கள் என்றும் காட்டமாக தெரிவித்தார். தமிழக மக்களுக்கு மோடி அரசின் நன்மைகள் தொடரும் என்றும் தெரிவித்து தனது உரையை நிறைவு செய்தார் அமித்ஷா. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து