சென்னை வந்தார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா: முதல்வர், துணை முதல்வர் வரவேற்பு

ஞாயிற்றுக்கிழமை, 22 நவம்பர் 2020      தமிழகம்
EPS OPS 2020 11 08

Source: provided

சென்னை : மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா சென்னை வந்தார். அவரை முதல்வர் பழனிசாமி, அமைச்சர்கள், பா.ஜ.க. தலைவர்கள் வரவேற்றனர். 

தமிழகத்தில் ஒரு நாள் பயணமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சென்னை வந்தார். சிறப்பு விமானம் மூலம் மதியம் 1.40-க்கு அவர் சென்னை வந்தடைந்தார். அவரை வரவேற்க வழி நெடுகிலும் பா.ஜ.க. தொண்டர்கள் குவிந்துள்ளனர். சென்னை விமான நிலையம் வந்த அவரை முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம், தமிழக அமைச்சர்கள், பா.ஜ.க. தலைவர் எல்.முருகன், சி.டி.ரவி, மூத்த தலைவர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், இல.கணேசன், சி.பி.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, வி.பி.துரைசாமி உள்ளிட்டோர் வரவேற்றனர்.

விமான நிலையத்திலிருந்து ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள ஹோட்டல் லீலா பேலசில் தங்குவதற்காக சென்றார். வழியில் இருபுறமும் பா.ஜ.க. தொண்டர்கள் நிற்பதைப் பார்த்த அவர் காரை விட்டு இறங்கி சிறிது தூரம் நடந்துச் சென்றார். அவருக்கு தொண்டர்கள் உற்சாகத்துடன் கை அசைத்தனர். சில இடங்களில் அ.தி.மு.க. தொண்டர்களும் கட்சிக்கொடியுடன் நின்று அமித்ஷாவுக்கு வரவேற்பு கொடுத்தனர்.

கலை நிகழ்ச்சிகள், நடன நிகழ்ச்சிகள், பேண்ட் வாத்தியம் முழங்க வரவேற்பு கொடுத்தனர். அமித் ஷாவின் சென்னை வருகைக்காக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இதற்காக 4 இணை ஆணையர்கள், 10 துணை ஆணையர்கள் தலைமையில் 2000 போலீஸார் கொண்ட பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவர் வந்த சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு வாகனங்கள் சென்றன. தொடர்ந்து சென்னையில் இரவு தங்கும் அவர், இன்று காலை சென்னையிலிருந்து புறப்பட்டு டெல்லி செல்கிறார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து