சென்னையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல் நிறைவு: இன்று வாக்கு எண்ணிக்கை

ஞாயிற்றுக்கிழமை, 22 நவம்பர் 2020      சினிமா
Filmmaker 2020 11 19

Source: provided

சென்னை : சென்னையில் நடைபெற்ற தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல் நிறைவடைந்தது. இன்று வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. 

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலுக்கான வாக்குப்பதிவு, சென்னை அடையாறில் உள்ள எம்.ஜி.ஆர்-ஜானகி கல்லூரியில் நேற்று காலை 8 மணிக்கு தொடங்கியது.

நீதியரசர் ஜெயச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த தேர்தல், மாலையில் நிறைவடைந்தது.  தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் பதவிக்கு டி.ராஜேந்தர், தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி, பி.எல்.தேனப்பன் ஆகிய 3 பேர் போட்டியிடுகிறார்கள்.

இவர்களில் பி.எல்.தேனப்பன், எந்த அணியையும் சேராமல் தனியாகவே களம் இறங்கியுள்ளார்.  இந்த தேர்தலில் மொத்தம் 26 பதவிகளுக்கு நிர்வாகிகள் போட்டியிடுகிறார்கள். நேற்றைய தேர்தலில் 1,303 பேர் ஓட்டுப்போட தகுதி பெற்றவர்களாக அறிவிக்கப்பட்டு இருந்தனர். இவர்களில் 1,050 பேர் மட்டுமே வாக்களித்துள்ளனர்.

நடிகை குஷ்பு, எஸ்.வி.சேகர், டி.ராஜேந்தர், சமுத்திரக்கனி உள்ளிட்ட திரையுலக முக்கிய பிரமுகர்கள் தங்கள் வாக்குகளை செலுத்தியுள்ளனர்.  இதற்கு முன்பு நடைபெற்ற தயாரிப்பாளர் சங்க தேர்தல்களில், வாக்குப்பதிவு முடிந்த சில மணி நேரங்களிலேயே முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆனால் இந்த முறை வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து