புயல் சேதங்களை கணக்கிடும் பணி விரைவில் முடிக்கப்படும்: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தகவல்

வெள்ளிக்கிழமை, 27 நவம்பர் 2020      தமிழகம்
SP-Velumani 2020 11 04

Source: provided

சென்னை : புயல் சேதங்களை கணக்கிடும் பணி விரைவில் முடிக்கப்படும் என்று உள்ளாட்சிட்த்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

சென்னையை அடுத்த ஆலந்தூர் கண்ணன் காலனியில் நிவர் புயல் காரணமாக மழைநீர் தேங்கியிருந்த பகுதியில் ஜெட் ராடிங் யந்திரங்கள் மற்றும் 25 எச்.பி. பம்பு செட்டுகள் மூலம் தண்ணீர் வெளியேற்றும் பணிகளை உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, அவருடன் சென்னை மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ், மெட்ரோ குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குனர் அரிகரன், மாநகராட்சி துணை கமிஷனர்கள் மேகநாத ரெட்டி, ஆல்பி ஜான், மண்டல கண்காணிப்பு அதிகாரி நிர்மல்ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பின்னர் அமைச்சர் வேலுமணி நிருபர்களிடம் கூறியதாவது:-

முன் எச்சரிக்கை நடவடிக்கையால் புயல் பாதித்த பகுதிகள் முழு பாதுகாப்பாக இருந்தன. முன் கூட்டியே அரசின் எச்சரிக்கையை மக்களிடம் கொண்டு சேர்த்ததால், உயிர்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள 39 ஆயிரம் தெருக்களில் 500 தெருக்களில் தேங்கிய மழை அகற்றப்பட்டது. தற்போது 58 தெருக்களில் மட்டுமே மழைநீர் தேங்கி உள்ளது. அவற்றை கூடுதல் யந்திரங்கள் மூலம் 2 நாட்களில் அப்புறப்படுத்தப்படும். சென்னையில் 2 நாளில் 287 மரம் மற்றும் கிளைகள் சாய்ந்தன. 387 புகார்கள் வந்துள்ளன.

சென்னையில் பிரதான சாலைகளில் விழுந்த மரங்கள் இரவோடு இரவாகவே அகற்றப்பட்டு விட்டது. இதனால் போக்குவரத்து பாதிப்பு, போக்குவரத்து நெரிசல் ஏற்படவில்லை. கூவம், அடையாறு உள்ளிட்ட ஆறுகளில் உள்ள மொத்தமுள்ள 26 ஆயிரம் ஆக்கிரமிப்புகளில், இதுவரை 17 ஆயிரத்து 500 ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு அவர்களுக்கு மாற்று இடம் அளிக்கப்பட்டுள்ளது. புயல் பாதிப்பு பகுதிகளில் உள்ளாட்சி துறை சார்பில் 36 ஆயிரம் பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

சென்னை புறநகரில் உள்ள சதுப்பு நிலங்களை தூர்வாரி சீரமைக்கும் பணிக்கான திட்டம் அரசிடம் உள்ளது. புயல் சேதங்களை கணக்கிட முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். விரைவில் இந்த பணிகள் முடிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

முன்கூட்டியே திட்டமிட்டு செயல்பட்டதாலும், மாநகராட்சியின் துரித நடவடிக்கையாலும், டுவிட்டர் போன்ற சமூக வலைதளங்களில் பதிவிட்ட புகார்களுக்கு முக்கியத்துவம் அளித்து, புயலால் விழுந்த மரங்கள் சென்னை மாநகராட்சியால் உடனுக்குடன் அகற்றப்பட்டன. இது பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

மாநகராட்சியின் பணியை பொதுமக்கள் சமூக வலைதளங்களில் பாராட்டி வருகின்றனர். சென்னை மாநகராட்சியில் 371 மரங்களை அறுக்கும் மோட்டார் கருவிகள், வாகனங்களில் பொருத்தப்பட்ட 2 கருவிகள், 6 தானியங்கி மரம் அறுக்கும் கருவிகள், 17 டெலஸ்கோப்பிக் மரம் அறுக்கும் கருவிகள் உள்ளன. இந்த 371 மரம் அறுக்கும் கருவிகள், சென்னையில் உள்ள 200 வார்டுகளுக்கும் வழங்கப்பட்டன.

இந்த கருவிகளை பயன்படுத்தும்போது சில நேரங்களில் செயின் அறுந்துவிடும். அதனால் முன்கூட்டியே திட்டமிட்டு 200 செயின்கள், அவற்றுக்கு தேவையான எண்ணெய்கள், எரிபொருள் உள்ளிட்டவை வாங்கி இருப்பில் வைக்கப்பட்டுள்ளன.

மேலும் ஏற்கெனவே திட்டமிட்டபடி, மண்டலத்துக்கு ஒருமரம் அறுக்கும் குழு அமைக்கப்பட்டது. இரவு நேர புகார்களை எதிர்கொள்ளவும் தனி குழுக்கள் அமைக்கப்பட்டன. அவர்கள் எப்போதும் தயார் நிலையில் இருந்தனர். மாநகராட்சி கட்டுப்பாட்டு அறைக்கு வரும் புகார்கள் அக்குழுவுக்கு உடனுக்குடன் தெரிவிக்கப்பட்டு. அக்குழு விரைந்து சென்று மரங்களை வெட்டி அகற்றியது.

கட்டுப்பாட்டு அறை மட்டுமல்லாது, அதிகாரிகளின் கைபேசிஎண்கள், வாட்ஸ்அப், டுவிட்டர் போன்றவற்றில் வரும் புகார்கள் அடிப்படையிலும் மரங்களை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ட்விட்டரில் அவர்கள் பதிவை போட்டதும். அடுத்த சில நிமிடங்களில் மாநகராட்சி பணியாளர்கள் மரம் வெட்டும் படங்களை டுவிட்டரில் பதிவிட்டனர். இதற்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து