தனியார் பள்ளிகளில் பாடம் நடத்தினால் கடும் நடவடிக்கை: அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு அரசு எச்சரிக்கை

வெள்ளிக்கிழமை, 27 நவம்பர் 2020      தமிழகம்
Sengottaiyan 2020 11 02

Source: provided

ஈரோடு : அரசு பள்ளி ஆசிரியர்கள் தனியார் பள்ளி மாணவர்களுக்கு மறைமுகமாக பாடம் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 

கோபி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மொடச்சூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை திறந்து வைத்து அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தனியார் பள்ளி மாணவர்களுக்கு பாடம் நடத்துவது குறித்து தகவல் வந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகம் முழுவதும் உள்ள நூலகங்களில் ஏற்கனவே ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். ஸ்டடி சென்டர் செயல்படுகிறது. நடப்பாண்டு மட்டும் 32 மாவட்ட நூலகங்களுக்கு தலா ரூபாய் 1.12 கோடி மதிப்பிலான புத்தகங்கள் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் படிப்பதற்கு வழங்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் சுமார் 17 ஆயிரத்து 840 மாணவ- மாணவிகள் நீட் தேர்வில் கலந்து கொண்ட தற்போது அரசு பள்ளி ஆசிரியர்களிடம் ஆன்லைன் மூலம் பயிற்சி பெற்று வருகின்றனர். அரசு பள்ளி மாணவர்களுக்கு இவ்வாறு பயிற்சி அளிப்பது இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டும் தான்.  அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு கல்வி தொலைக்காட்சி மூலமும் ஆன்லைன் மூலமும் பாடம் நடத்தப்படுகிறது.

ஒவ்வொரு சனிக்கிழமையும் அவர்களது சந்தேகங்களுக்கு ஆசிரியர்கள் காலை 8 மணி முதல் 12 மணி வரை விளக்கம் அளித்து வருகின்றனர். தற்பொழுது பள்ளி செல்லா குழந்தைகள் குறித்து கணக்கெடுப்பு நடைபெற்று வருகிறது.  அந்தந்த பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் அவரவர் பகுதியில் உள்ள பள்ளி செல்லா குழந்தைகள் குறித்து ஒவ்வோர் ஆண்டும் ஆய்வு நடத்தி வருகின்றனர். அதன் அடிப்படையில் தற்போதும் இந்த ஆய்வு நடைபெற்று பள்ளி செல்லா குழந்தைகள் கண்டறியப்பட்டு பள்ளிகளில் அவர்கள் சேர்க்கப்படுவார்கள். 

முதல்வர் எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் புயல் சேதம் பெருமளவு தவிர்க்கப்பட்டுள்ளது. இதை அனைத்து பத்திரிகைகளும் பாராட்டியுள்ளன. முதல்வரும் நேரடியாக செம்பரம்பாக்கம் மற்றும் கடலோர பகுதிகளுக்கு சென்று புயல் நிவாரண பணிகளில் சிறப்பாக செயல்பட்டதை அனைவரும் பாராட்டுகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து