சபரிமலையில் தரிசனத்திற்கு கூடுதல் பக்தர்களை அனுமதிக்க வாய்ப்பு

வெள்ளிக்கிழமை, 27 நவம்பர் 2020      இந்தியா
Sabarimala 2020 11 16

Source: provided

திருவனந்தபுரம் : கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சபரிமலை ஐயப்பன் கோவிலில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். ஆன்லைனில் முன்பதிவு, கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் உள்ளிட்ட கட்டுப்பாடுகள் பக்தர்களுக்கு விதிக்கப்பட்டுள்ளன.  அது மட்டுமின்றி பக்தர்கள் கூட்டமாக கூடுவதை தவிர்ப்பதற்காக தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டது.

அதன்படி சனி மற்றும் ஞாயிறு தினங்களில் 2 ஆயிரம் பேரும், மற்ற நாட்களில் 1000 பேரும் அனுமதிக்கப்படுகின்றனர். மண்டல மற்றும் மகர விளக்கு ஆகிய 2 பூஜை காலங்களிலும் இந்த விதிமுறையே கடைபிடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் மண்டல- மகர விளக்கு பூஜை கால தரிசனத்துக்கான முன்பதிவு முடிந்து விட்டது.

இதனால் லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது.  ஆகவே சபரிமலைக்கு தினமும் அனுமதிக்கப்படும் பக்தர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. பக்தர்கள் வருகை மிகவும் குறைவாக இருப்பதால் கடும் வருவாய் இழப்பு ஏற்பட்டு வருவதை கூடுதல் பக்தர்களை அனுமதிக்க வேண்டும் என்று தேவசம்போர்டும் வலியுறுத்தி இருக்கிறது. 

இது தொடர்பாக கேரள தேவசம்போர்டு அமைச்சர்  கடகம்பள்ளி சுரேந்திரனுக்கு, தேவசம்போர்டு தலைவர் வாசு 2முறை கடிதம் எழுதியிருக்கிறார். அவர் தனது கடிதத்தில், வருவாயைவிட செலவு பத்து மடங்கு அதிகமாக உள்ளதாகவும், ஆகவே வெளிமாநில பக்தர்கள் அதிகளவில் வந்தால் தான் வருவாய் அதிகரிக்கும் என்பதால் தினமும் 10ஆயிரம் பக்தர்களை அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.  அந்த கடிதங்கள் குறித்து தேவசம்போர்டு அமைச்சர் பரிசீலனை செய்து வருகிறார். இதுதொடர்பாக அவர் அரசின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளார்.

மேலும் கூடுதல் பக்தர்களை அனுமதிப்பது குறித்து மாநில சுகாதாரத்துறையிடம் கருத்து கேட்டுள்ளார்.  அதே நேரத்தில் சபரிமலையில் பணியில் ஈடுபட்டிருந்த தேவசம்போர்டு ஊழியர் மற்றும் போலீஸ்காரருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதனை குறிப்பிட்டு சுகாதாரத்துறை, தேவசம்போர்டு அமைச்சருக்கு கடிதம் அனுப்பியுள்ளது.

இந்நிலையில் தினமும் 1000 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருவதால் சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. சமூக இடைவெளியை பின்பற்றி எந்தவித நெரிசலும் இல்லாமல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். நேற்று முன்தினம் மாலை 5மணிக்கு பிறகு பக்தர்கள் வருகை முற்றிலுமாகஇல்லை.

இதனால் பதினெட்டாம் படி மற்றும் சன்னிதான பகுதி ஒரு பக்தர் கூட இல்லாமல் வெறிச்சோடி கிடந்தது. பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் மற்றும் கோவில் ஊழியர்கள் மட்டுமே காணப்பட்டனர்.  கொரோனா கட்டுப்பாடுகளால் கூட்டம் முற்றிலும் இல்லாமல் இருப்பதாலும், சாமி தரிசனம் செய்ததும் மலை இறங்கி விடவேண்டும் உள்ளிட்ட கட்டுப்பாடுகளை தொடர்ந்து அமல்படுத்தி சபரிமலைக்கு அனுமதிக்கப்படும் பக்தர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து