முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அனைத்து போட்டிகளிலும் இந்தியா தோல்வி அடையும்: வாகன் கணிப்பு

சனிக்கிழமை, 28 நவம்பர் 2020      விளையாட்டு
Image Unavailable

Source: provided

லண்டன் : ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 ஒரு நாள், மூன்று 20 ஓவர் மற்றும் 4 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கிறது. முதலில், ஒரு நாள் தொடர் நடத்தப்படுகிறது. 

இதன்படி இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி துறைமுக நகரான சிட்னியில் நடைபெற்றது. இதில், டாஸ் வென்று ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்திய அணிக்கு 375 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. 

ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பின்ச் 114 (124) மற்றும் ஸ்மித் 105 (66) என இருவரும் சதம் அடித்தது அந்த அணி 374 ரன்களை ஸ்கோர் செய்ய உதவியது. இதன்பின்னர் ஆடிய இந்திய அணியில் ஹர்தீக் பாண்ட்யா (90) மற்றும் ஷிகர் தவான் (74) ரன்கள் எடுத்து சரிவில் இருந்து அணியை மீட்டனர். 

எனினும், 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 308 ரன்களே எடுத்து இந்திய அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த போட்டியில், இந்திய அணியின் செயல்பாடுகள் திருப்தி அளிக்கும் வகையில் இல்லை என இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் கூறியுள்ளார். 

அவர் கூறும்பொழுது, கடந்த 9 மாதங்களில் தனது முதல் சர்வதேச போட்டியில் விளையாடிய இந்திய அணி சிறந்த முறையில் இல்லை. அவர்கள் பந்து வீச்சில் அதிக ரன்களை விட்டு கொடுத்தனர். பீல்டிங்கில் சோபிக்கவில்லை. அதிரடியாக விளையாடினாலும், பேட்டிங்கில் ஒன்றிணைந்து செயல்பட முடியவில்லை. 

ஐ.பி.எல். போட்டிகளில் விளையாடியபோதும், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒரு நாள் சர்வதேச போட்டியில் ஓரணியாக இந்திய வீரர்களால் திரும்ப முடியவில்லை. 

சர்வதேச ஒரு நாள் போட்டிக்கான இந்திய கிரிக்கெட் அணி பழைய பள்ளிக்கூடம் போல் உள்ளது. இந்த சுற்றுப்பயணத்தில் அனைத்து நிலைகளிலான போட்டிகளிலும் (ஒரு நாள், 20 ஓவர் மற்றும் டெஸ்ட் போட்டிகள்) இந்திய கிரிக்கெட் அணியை ஆஸ்திரேலியா தோற்கடிக்கும் என்றே நான் நினைக்கிறேன் என டுவிட்டரில் தெரிவித்து உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து