கிரிக்கெட் போட்டி ரத்து அச்சுறுத்தல்: நியூசிலாந்துக்கு எதிராக அக்தர் ஆவேசம்

சனிக்கிழமை, 28 நவம்பர் 2020      விளையாட்டு
Akhtar 2020-11-28

Source: provided

லாகூர் : பாகிஸ்தான் கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று 20 ஓவர் போட்டிகள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது. முதல் 20 ஓவர் போட்டி வருகிற டிசம்பர் 18-ந் தேதி நடைபெறுகிறது. 

இதற்காக நியூசிலாந்து சென்றுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணியினர் அந்நாட்டு கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளின்படி, 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர். 

நியூசிலாந்தில் ஓட்டல் ஒன்றில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ள பாகிஸ்தான் அணி வீரர்களுக்கு 3வது நாளில் கொரோனா பரிசோதனை நடந்தது. இதில் நேற்று வரை 7 வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. அவர்கள் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டு உள்ளனர். 

நியூசிலாந்து சுகாதாரத்துறை, ஓட்டலில் தங்கியுள்ள பாகிஸ்தான் வீரர்கள் குழுவாக பயிற்சியில் ஈடுபட அனுமதி வழங்கியிருந்தது. ஆனால், ஓட்டலில் கொரோனா தடுப்பு விதிகளை மீறிய பாகிஸ்தான் அணியினர் ஓட்டலில் சுதந்திரமாக நடமாடுவதும், உணவுகளை பரிமாறிக்கொள்வதும் கண்காணிப்பு கேமிராவில் பதிவானது. 

இதையடுத்து, பாகிஸ்தான் வீரர்களுக்கு வழங்கப்பட்டிருந்த பயிற்சிக்கான அனுமதியை நியூசிலாந்து அரசு ரத்து செய்தது. அதுமட்டுமல்லாமல் தொடர்ந்து பாகிஸ்தான் வீரர்கள் விதிமுறைகளை மீறி நடந்தால், நியூசிலாந்திலிருந்து திருப்பி அனுப்பி வைக்கப்படுவார்கள் என்றும் எச்சரித்தது. 

இதுபற்றி அறிந்த பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான சோயிப் அக்தர் ஆவேமுடன் கூறும்பொழுது, பாகிஸ்தான் அணி ஒரு தேசிய அணி. கிளப் அணி அல்ல என நியூசிலாந்து அரசுக்கும், அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்திற்கும் கூறி கொள்ள விரும்புகிறேன். 

சுற்றுப்பயணம் ரத்து செய்யப்படும் என எப்படி நீங்கள் கூற முடியும்? நீங்கள் எங்களுக்கு அவசியமில்லை. எங்களுடைய கிரிக்கெட் இத்துடன் முடிந்து விடவில்லை. எங்களுக்கு பணம் இல்லாமல் இல்லை. 

போட்டிகளை ஒளிபரப்பும் உரிமைகளுக்காக கிடைக்கும் பணம் உங்களுக்கு போய் சேரும். எங்களுக்கு அல்ல. அதனால், இதுபோன்ற சோதனையான காலத்தில் உங்கள் நாட்டிற்கு நாங்கள் வந்து விளையாடுவதற்கு நீங்கள் எங்களுக்கு கடன்பட்டு இருக்கிறீர்கள். 

நீங்கள் பாகிஸ்தானை பற்றி பேசுகிறீர்கள். அதனால் உணர்ந்து நடந்து கொள்ளுங்கள். இதுபோன்ற அறிக்கைகளை இனி வெளியிடாமல் நிறுத்தி கொள்ளுங்கள். என்ன கூறுகிறீர்கள் என்பதில், அடுத்த முறை கவனமுடன் இருங்கள் என அக்தர் பேசியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து