நுழைவுத் தேர்வு, பொதுத் தேர்வுகள் குறித்த சந்தேகம்: டிசம்பர் 3-ல் மாணவர்களுடன் மத்திய அமைச்சர் பொக்ரியால் கலந்துரையாடல்

சனிக்கிழமை, 28 நவம்பர் 2020      இந்தியா
Ramesh-Pokri 2020-11-28

Source: provided

புதுடெல்லி : நுழைவுத் தேர்வு, பொதுத் தேர்வுகள் குறித்த சந்தேகங்களைப் போக்க டிச.3-ம் தேதி மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் மாணவர்களுடன் கலந்துரையாட உள்ளார். இணையவழியில் இந்த நிகழ்வு நடைபெற உள்ளது.

மத்திய கல்வி அமைச்சகத்தின் பல்வேறு திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்த உயர்மட்ட ஆய்வுக்குழு கூட்டம் அண்மையில் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு மத்தியக் கல்வித் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தலைமை தாங்கினார். இதில் துறைச் செயலாளர்கள் அமித் கரே, அனிதா கர்வால் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதில் தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ), பல்வேறு கல்வி வாரியங்களில் தற்போதுள்ள சூழ்நிலையை மதிப்பீடு செய்து, ஜே.இ.இ, நீட் உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகள், போட்டித்தேர்வுகள் மற்றும் பொதுத் தேர்வுகளுக்கான புதிய பாடத்திட்டங்களைக் கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் எழுந்தது. இது மாணவர்கள் மத்தியில் பல்வேறு சந்தேகங்கள் மற்றும் கேள்விகளை எழுப்பியது.

இந்நிலையில் இவை குறித்த சந்தேகங்களைப் போக்க டிச.3-ம் தேதி மத்தியக் கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் மாணவர்களிடம் கலந்துரையாட உள்ளார். இணையவழியில் இந்த நிகழ்வு நடைபெற உள்ளது.

இதுகுறித்துத் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், அன்பு மாணவர்களே, 2020-ம் ஆண்டு அத்தனை சிறப்பாக அமைந்திருவில்லை என்பதை உணர்கிறேன். உங்களின் வருங்காலம் குறித்து நீங்கள் கவலைப்பட்டிருக்கலாம். 

வரப்போகும் நுழைவுத் தேர்வுகள், போட்டித்தேர்வுகள் மற்றும் பொதுத் தேர்வுகள் குறித்து டிசம்பர் 3-ம் தேதி உங்களுடன் கலந்துரையாட உள்ளேன். #EducationMinisterGoesLive என்ற ஹேஷ்டேகில் உங்களின் கருத்துகள்/ கேள்விகளை முன்வைக்கலாம் என்று மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து