பெங்களூரு : பெங்களூருவில், முதல்வர் எடியூரப்பாவின் அரசியல் செயலாளர் என்.ஆர்.சந்தோஷ் அதிக அளவில் தூக்க மாத்திரைகளை தின்று தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.
கர்நாடக முதல்வர் எடியூரப்பாவின் அரசியல் செயலாளராக பணியாற்றி வந்தவர் என்.ஆர்.சந்தோஷ். இவர் பெங்களூரு டாலர்ஸ் காலனியில் தனது மனைவி மற்றும் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். கடந்த மே மாதம் 28-ம் தேதி இவர் முதல்வர் எடியூரப்பாவின் அரசியல் செயலாளராக நியமிக்கப்பட்டார்.
அதுமுதல் எடியூரப்பா தான் செல்லும் இடங்களுக்கு எல்லாம், என்.ஆர்.சந்தோசையும் அழைத்து சென்று வந்தார். முதல்வருடன் நேரடி தொடர்பு உள்ள முக்கிய நபர்களில் ஒருவராக என்.ஆர்.சந்தோஷ் வலம் வந்தார். கடந்த வியாழக்கிழமை முதல்வர் எடியூரப்பாவுடன் திருமண நிகழ்ச்சி ஒன்றில் என்.ஆர்.சந்தோஷ் கலந்து கொண்டார். நேற்று முன்தினம் காலையில் முதல்வர் எடியூரப்பாவுடன் சேர்ந்து என்.ஆர்.சந்தோஷ் நடைபயிற்சியில் ஈடுபட்டார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு என்.ஆர்.சந்தோஷ் தனது வீட்டில் உள்ள தன்னுடைய அறையில் மயங்கி கிடந்தார். அதைப்பார்த்த அவருடைய குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக பெங்களூருவில் உள்ள எம்.எஸ்.ராமய்யா தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இதுபற்றி போலீசார் நடத்திய விசாரணையில், என்.ஆர்.சந்தோஷ் அதிக அளவில் தூக்க மாத்திரைகளை தின்று தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது. ஆனால் அவர் எதற்காக தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார் என்பது தெரியவில்லை. அதுபற்றி போலீசார் விசாரித்து வருகிறார்கள். இதற்கிடையே முதல்வர் எடியூரப்பா எம்.எஸ்.ராமய்யா மருத்துவமனைக்கு நேரில் சென்று என்.ஆர்.சந்தோசின் உடல்நிலை குறித்து விசாரித்தார். இந்த சம்பவம் பெங்களூருவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.