கொரோனா நோய்க்கு உணவே மருந்தாக திகழும் அட்சய பாத்திரம் அம்மா கிச்சன் 150-வது நாள் நிறைவு: பொதுமக்களுக்கு தேவையெனில் மீண்டும் திறக்கப்படும்: அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் அறிவிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 29 நவம்பர் 2020      தமிழகம்
RB-Udayakumar 2020

Source: provided

மதுரை : கொரோனா நோய்க்கு உணவே மருந்தாக திகழும் அட்சய பாத்திரமாக கருதப்படும் அம்மா கிச்சன் நேற்று 150-வது நாளுடன் நிறைவு பெற்றது. பொதுமக்களுக்கு தேவையெனில் மீண்டும் திறக்கப்படும் என்று அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் அறிவித்துள்ளார். 

முதல்வர் மற்றும் துணை முதல்வர்  ஆகியோரின் வழிகாட்டுதலின் படி 04.07.2020 அன்று தொற்றுநோய் பாதிப்பு அடைந்தவர்களுக்கு அம்மா பேரவையின் சார்பில் அம்மா கிச்சன் மூலம் உணவு வழங்கப்பட்டு வந்தது. 

கொரோனா வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு கோவிட் கேர் சென்டர்களில் தங்கி சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு 5 வேளை உணவு வழங்க கூடிய அட்சய பாத்திரமாக திகழும் அம்மா கிச்சனின் 150-வது நாள் மற்றும் நிறைவு விழா  வருவாய் பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில் நுட்பவியல் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் நேற்று நடைபெற்றது. முன்னதாக 150-வது நாளில் நேற்று அம்மா கிச்சனில் உணவு தயாரிப்பதை வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி. உ.தயகுமார், மதுரை மாவட்ட கலெக்டர் அன்பழகன், மாநகராட்சி ஆணையாளர் விசாகன், மாவட்ட வருவாய் அலுவலர் செந்தில்குமாரி ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். 

இந்த விழாவில் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேசியதாவது, 

இந்தியாவிலேயே அன்னை தமிழ்நாட்டினை முதன்மையான மாநிலமாக வழிநடத்தி வருகின்ற   அம்மாவின் அரசு, உலகளவில் பெரும் அச்சுறுத்தலாக இருந்த கொரோனா வைரஸ் பெரும் தொற்றுப் பரவலை கட்டுப்படுத்தி,  பாரத பிரதமரின் பாராட்டுதலையும், வாழ்த்துக்களையும் பெற்றது.   தமிழக முதல்வர் மக்களுடைய நலன் காப்பதற்காக, மனிதநேய பார்வையோடு அம்மா கண்ட கனவுகளையெல்லாம் நனவாக்குகின்ற வகையிலான பல திட்டங்களை செயல்படுத்தி, பல்வேறு விருதுகளை தமிழ்நாட்டிற்கு பெற்றுத் தந்திருக்கிறார்.  குறிப்பாக நிர்வாகம், நீர் மேலாண்மை மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையில் தொடர்ந்து இந்தியாவிலேயே முதன்மையான மாநிலமாக தமிழ்நாட்டை விளங்கச் செய்து ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் பெருமை தேடித் தந்திருக்கிறார் முதல்வர். 

உலக வல்லரசு நாடுகளே கொரோனா வைரஸ் பெரும் தொற்றுப் பரவலை தடுகக்கும் நடவடிக்கைகளில் தடுமாறுகின்ற நிலையில், தமிழக முதல்வர் பல்வேறு களநிலவரங்களை நேரிலே ஆய்வு செய்து, கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகளையும், நிவாரண நடவடிக்கைகளையும் துரிதப்படுத்தியதால் நோய்த் தொற்று பரவல் கட்டுப்படுத்தப்பட்டது.  அந்த வகையில் மதுரை மாவட்டத்தில் 18 சதவீதத்திற்கு மேல் உச்சமாக இருந்த கொரோனா நோய்த் தொற்றுப் பரவலை கட்டுப்படுத்த முதல்வர் கொடுத்த அறிவுரையை, மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சி நிர்வாகமும் திறம்பட செயல்படுத்தியதன் விளைவாக தற்போது கொரோனா நோய்த் தொற்றுப் பரவல் 0.5 சதவீதமாக உள்ளது.  தற்போது சிகிச்சையிலே 282 நபர்கள் உள்ளனர்.  

அம்மா பேரவையின் சார்பிலே தரமான, ஆரோக்கியமான உணவுகளை தொடர்ந்து தினமும் 5 வேளை வழங்குவதற்காக எடுத்த முயற்சிக்கு, பல்வேறு சமூக ஆர்வலர்களும் துணை நின்று நடைமுறைப்படுத்தி கோவிட் கேர் சென்டர்களில் தங்கியிருந்தவர்களுக்கு தொடர்ந்து தினமும் 5 வேளை உணவு வழங்கப்பட்டது.  தற்போது கோவிட் கேர் சென்டர்களில் சிகிச்சை பெறுவோர் எவரும் இல்லாத நிலையில் அம்மா கிச்சன் 150-ம் நாளோடு நிறைவு பெறுகிறது.  கடந்த 150 நாட்களில் ஏறத்தாழ 15 லட்சம் நபர்களுக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது.  தேவையிருப்பின் அம்மா கிச்சன் தனது சேவையை மீண்டும் தொடங்கும் என்று தெரிவித்தார்.   

இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் அன்பழகன், மாநகராட்சி ஆணையாளர் விசாகன், சட்டமன்ற உறுப்பினர்கள் வி.வி. ராஜன் செல்லப்பா, மாணிக்கம், பெரியபுள்ளான்(எ)செல்வம், எஸ்.எஸ்.சரவணன், மாவட்ட வருவாய் அலுவலர் செந்தில்குமாரி, முன்னாள் எம்.எல்.ஏ. கே. தமிழரசன், மாநில அம்மா பேரவை இணை செயலாளர் எம். இளங்கோவன், துணை செயலாளர் பா. வெற்றிவேல், பாரதி யுவகேந்திரா நிறுவனர் நெல்லை பாலு, புலவர் சங்கரலிங்கம் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் உள்ளிட்ட பலரும்  கலந்து கொண்டனர்.

தமிழக முதல்வர் கொரோனா வைரஸ் கோவிட்-19 கட்டுப்படுத்த எடுத்து வருகின்ற சீரிய விழிப்புணர்வு, நிவாரன நடவடிக்கைகள் இந்திய திருநாட்டிற்கே ஒரு எடுத்துக்காட்டாக இருக்கிறது. பாரத பிரதமர் மோடி காணொலிக்காட்சியின் மூலமாக முதல்வரின் நடவடிகைகளுக்கு வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தார். மேலும் தமிழ்நாட்டு மக்கள் கொடுக்கும் ஒத்துழைப்பையும் இரவு பகல் பாராமல் உழைத்துக் கொண்டிருக்கும் அரசு ஊழியர்களையும் வாழ்த்தி பாராட்டினார். இந்த கொரோனா வைரஸ் கோவிட்-19 ஊரடங்கு காலத்தில் முதல் ஊடரங்கில் இருந்து விவசாயத்திற்கு தளர்வு கொடுத்து வேளாண் உற்பத்தியினை பெருக்கி விலைவாசியை கட்டுக்குள் வைத்துள்ளார். உணவு பொருட்கள், காய்கறிகள் அனைத்தும் தங்குதடையின்றி கிடைக்க முயற்சி எடுத்து வெற்றி பெற்றவர் தமிழக முதல்வர். அதை போன்று தொழில்துறையினனுடைய வளர்ச்சிக்கு தனிக்கவனம் செலுத்தி அதற்காக நெறிமுறையை செயல்படுத்தி அதிகமான தொழில் முதலிடுகளை ஈர்த்த பெருமை முதல்வரை சேரும்.    ஒவ்வொரு மாவட்டத்திலுள்ள விவசாயிகளையும் தொழில் முதலீட்டார்களையும் , மகளிர் சுயஉதவி குழுக்களையும்,பல்வேறு சங்கத்தினாரையும், பத்திரிக்கையாளரையும் நேரில் சந்தித்து கள நிலவரங்களை கேட்டு அறிந்து மக்களின் தேவைகளை பூர்த்தி செய்து வருகிறார். அரசு பள்ளி மாணவர்களின் மருத்துவ படிப்புற்காக அமைச்சரவை கூட்டத்தில் விவாதித்து சட்ட நுணுக்கங்களை கையான்டு சட்டமன்றத்தில் மசோதா தாக்கல் செய்து அதை ஏகமனதாக நிறைவேற்றி 7.5 சதவிகிதம் உள் ஒதுக்கீடு செய்து வெற்றி பெற்றுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் கோவிட்-19 நோய் தொற்று அதிகம் பாதிக்கப்பட்ட சென்னைக்கு அடுத்த நிலையில் மதுரை மாவட்டம் இருந்து வந்த நிலையில் மாவட்ட கலெக்டர், மாநகராட்சி ஆணையாளர் மற்றும் அத்துனை அரசு அலுவலர்களும் இரவு பகல் பாராமல் முதல்வரின் வழிகாட்டுதலின்படி செயல்பட்டு கோவிட்-19 நோய் தொற்றிலிருந்து படிப்படியான குறைத்து இன்று வெற்றி பெற்றுள்ளனர். 

அம்மாவின் பெயரில் மதுரையில் செயல்பட்டு வரும் அம்மா கிச்சன் தமிழக முதல்வரின் ஆசி பெற்று நேற்றுடன் 150-வது நாளாக தனது சேவையை தொடர்ந்து செய்து நிறைவு பெற்றுள்ளது. 

கோவிட்-19 நோய் தொற்று அதிகம் இருந்த நாட்களில் 2800 நபர்களுக்கு அம்மா கிச்சன் மூலமாக தினந்தோறும் உணவு வழங்கப்பட்டு வந்தது. தற்போது தமிழக முதல்வரின் சீறிய திட்டங்களை கடைபிடித்து ஆரம்ப காலத்தில் 2 சதவிகிதத்திலிருந்து 20 சதவிகிதமாக உயர்ந்த நிலையிலும் நமது மாவட்ட நிர்வாகமும் மாநகராட்சி அலுவலர்களும் அச்சமின்றி இரவு பகல் பாராமல் சிறப்பாக செயல்பட்டு இன்று 0.5 சதவிகிதமாக குறைத்து கோவிட்-19 நோய் தொற்று முலுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது மதுரை மக்களின் மனதில் நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. 

அம்மா கிச்சனின் பணி குறித்து மதுரை மக்கள் கூறியதாவது:

முதல்வர் மற்றும் துணை முதல்வர்  ஆகியோரின் வழிகாட்டுதலின் படி அம்மா கிச்சன் சிறப்பாக செயல்பட்டு தமிழகத்தில் மக்களின் சேவையில் மதுரை சிறப்பாக செயல்படுகிறது. இந்த அம்மா கிச்சன் மூலம் உணவே மருந்தாக திகழ்ந்து இதன் மூலம் மருந்தே கண்டுபிடிக்க முடியாத இந்த நோயினால் அதிகமானோர் குணமடைந்து வருகின்றனர், அம்மா கிச்சனை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் சிறப்பாக செயல்படுத்தி வருகிறார் என பாராட்டினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து