காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வலுவடைந்தது: தென் தமிழகம், கடலோர மாவட்டங்களில் கனமழை: வானிலை ஆய்வு மையம் தகவல்

ஞாயிற்றுக்கிழமை, 29 நவம்பர் 2020      தமிழகம்
Weather-Center 2020 11 12

Source: provided

சென்னை : காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வலுவடைந்ததால் தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும் பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, 

நேற்று முன்தினம் தெற்கு அந்தமான், அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்தியப் பெருங்கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வலுவடைந்து, நேற்று ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடல் பகுதி மற்றும் இந்தியப் பெருங்கடலை ஒட்டிய பூமத்திய ரேகை பகுதியில் நிலை கொண்டுள்ளது.  அடுத்த 36 மணி நேரத்தில் மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வரும் 2-ம் தேதி தென் தமிழகக் கடலோரப் பகுதியை நோக்கி நகரக் கூடும்.

தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் இன்று ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.  டிச.1-ம் தேதி அன்று கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும் . 

டிச.2-ம் தேதி அன்று கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், தென்காசி, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதி கனமழையும், தேனி, மதுரை, சிவகங்கை , புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும் பெய்யும்.  டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.  டிச.3-ம் தேதி அன்று கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தேனி, விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழையும், ஏனைய கடலோர மாவட்டங்கள் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் மிதமான மழையும், உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். 

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும். கடந்த 24 மணி நேரத்தில்  தம்மம்பட்டி (சேலம்) 4 செ.மீ., போளூர் (திருவண்ணாமலை), இளையான்குடி (சிவகங்கை), புதுச்சத்திரம் (நாமக்கல்) தலா 3 செ.மீ., மணிமுத்தாறு (திருநெல்வேலி), குன்னூர் (நீலகிரி), ஆலங்குடி (புதுக்கோட்டை), பாபநாசம் (திருநெல்வேலி), வெம்பாக்கம் (திருவண்ணாமலை), ஆத்தூர் (சேலம்), பெருங்கலூர் (புதுக்கோட்டை) தலா 2 செ.மீ. அதிகபட்சமாக மழை பெய்துள்ளது. 

இன்று 30-ம் தேதி தெற்கு வங்கக் கடலின் மத்தியப் பகுதி, தென்மேற்கு வங்கக் கடல் மன்னார் வளைகுடா, குமரிக்கடல் மற்றும் தமிழக கடலோரப் பகுதி, மாலத்தீவு, கேரளக் கடலோரப் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். டிசம்பர் 1-ம் தேதி தென்மேற்கு வங்கக் கடல், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் மற்றும் தமிழக கடலோரப் பகுதி, கேரள கடலோரப் பகுதி, மாலத்தீவுப் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 70 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 

டிசம்பர் 2-ம் தேதி மன்னார் வளைகுடா, குமரிக்கடல் மற்றும் தென்தமிழகக் கடலோரப் பகுதி, கேரளக் கடலோரப் பகுதி, லட்சத்தீவு, மாலத்தீவுப் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 60 முதல் 70 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 80 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். டிசம்பர் 3-ம் தேதி தென்கிழக்கு அரபிக்கடல், கேரளக் கடலோரப் பகுதி, லட்சத்தீவுப் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 70 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.  மீனவர்கள் மேற்கூறிய பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும் ஆழ்கடல் பகுதிக்கு வரும் டிசம்பர் 2-ம் தேதி வரை செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து