அனைத்து ரெயில் நிலையங்களிலும் மண் குவளையில் தேநீர் விற்பனை: ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தகவல்

திங்கட்கிழமை, 30 நவம்பர் 2020      இந்தியா
Piyush-Goyal 2020 11 01

Source: provided

ஜெய்ப்பூர் : இந்தியா முழுவதும் அனைத்து ரெயில் நிலையங்களில் பிளாஸ்டிக் கப்புகளுக்கு பதிலாக சுற்றுச்சூழலுக்கு உகந்த மண் குவளையில் தேநீர் விற்பனை செய்யப்படும் என மத்திய ரெயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.

ராஜஸ்தான் மாநிலத்தில் மின்மயமாக்கப்பட்ட திகாவாரா - பண்டிகுயி பிரிவு ரெயில் வழித்தட தொடக்க நிகழ்ச்சி திகாவாரா ரெயில் நிலையத்தில் நடைபெற்றது. 34 கி.மீ. தொலைவு கொண்ட இந்த மின் வழித்தடத்தில் ரெயிலை கொடியசைத்து தொடங்கி வைத்து அமைச்சர் பியூஷ் கோயல் பேசுகையில், நாட்டில் சுமார் 400 ரெயில் நிலையங்களில் தற்போது மண் குவளையில் தேநீர் வழங்கப்படுகிறது.

வருங்காலத்தில் அனைத்து ரெயில் நிலையங்களிலும் தேநீரை மண் குவளையில் விற்பனை செய்ய திட்டமிட்டு வருகிறோம். பிளாஸ்டிக் இல்லாத இந்தியாவை நோக்கிய ரெயில்வே துறையின் பங்களிப்பாக இந்த நடவடிக்கை அமையும். மண் குவளை சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும். இதன்மூலம் லட்சக்கணக்கான மக்கள் வேலைவாய்ப்பு பெறுவார்கள்.

மத்தியில் மோடி தலைமையிலான அரசு ஆட்சிக்கு வரும் முன்னர் ராஜஸ்தானில் ரெயில்வே துறை புறக்கணிக்கப்பட்டது. டெல்லி – -மும்பை வழித்தடத்துக்குப் பின்னர் அடுத்த 30 ஆண்டுகளாக எந்த வழித்தடமும் மின்மயமாக்கப்படவில்லை. 2009–-2014ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2014-–2020-இல் ராஜஸ்தானில் ரெயில்வே மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்களில் முதலீடு பலமடங்கு உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் ரெயில் வழித்தடங்களை மின்மயமாக்குவதன் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து