முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புயலால் ஒத்திவைக்கப்பட்ட மருத்துவக் கலந்தாய்வு மீண்டும் துவங்கியது

திங்கட்கிழமை, 30 நவம்பர் 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : நிவர் புயலால் தள்ளி வைக்கப்பட்ட எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு நேற்று தொடங்கியது.

சென்னை பெரியமேட்டில் உள்ள நேரு விளையாட்டரங்கில் கடந்த 18-ம் தேதி எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடங்கியது. 20-ம் தேதி வரை 3 நாட்களுக்கு அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டுக் கலந்தாய்வு நடந்தது.

இதையடுத்து 21-ந் தேதி மாற்றுத்திறனாளிகள், ராணுவ வீரர்களின் வாரிசுகள் மற்றும் விளையாட்டு வீரர்களுக்கான சிறப்புப் பிரிவு கலந்தாய்வு நடைபெற்றது. கலந்தாய்வில் கலந்து கொண்டு கல்லூரிகளில் இடங்களை தேர்வு செய்த மாணவர்களுக்கு சேர்க்கை ஆணை வழங்கப்பட்டது.

இவர்கள் கல்லூரிகளில் உடனடியாக சேர அறிவுறுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து 23-ந் தேதி பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு தொடங்கியது. முதல் நாள் மட்டும் கலந்தாய்வு நடைபெற்ற நிலையில், நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 24-ந் தேதி முதல் 28-ந் தேதிவரை நடைபெற இருந்த 5 நாட்கள் கலந்தாய்வு தள்ளிவைக்கப்பட்டது.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் உத்தரவுப்படி கலந்தாய்வுக்கு ஏற்கனவே வந்திருப்பவர்களுக்கு சுகாதாரத்துறை மூலம் தக்க ஏற்பாடுகள் செய்து தரப்பட்டன.

இந்நிலையில் புயலால் தள்ளிவைக்கப்பட்ட கலந்தாய்வு நேற்று தொடங்கியது. நீட் தேர்வில் 630 முதல் 610 வரை மதிப்பெண்கள் பெற்ற 389 மாணவர்கள் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டனர்.

தமிழகத்தில் 26 அரசுக் கல்லூரிகளில் உள்ள 2,747 இடங்களில் 307 இடங்கள் நிரம்பியுள்ளன. அதேபோல 15 சுயநிதிக் கல்லூரிகளில் உள்ள 1,061 இடங்களில் ஓரு இடம் மட்டும் நிரம்பியுள்ளது.

நேற்று தொடங்கியுள்ள பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு டிசம்பர் மாதம் 10-ந் தேதி வரை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து