விரைவில் முடிவை அறிவிப்பேன் ரஜினிகாந்த்

திங்கட்கிழமை, 30 நவம்பர் 2020      சினிமா
Rajini 2020 11 30

Source: provided

சென்னை : ‘‘விரைவில் முடிவை அறிவிப்பேன்…’’ என்று நடிகர் ரஜினிகாந்த் போயஸ் தோட்டம் வீட்டில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அறிவித்தார். எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் என்னுடைய அரசியல் முடிவை அறிவிப்பேன்’ என்றும் அவர் தெரிவித்தார்.

‘கொரோனா’ பரவல் காரணமாகவும், உடல் நலம் கருதியும் நடிகர் ரஜினிகாந்த், அரசியல் கட்சி துவக்க மாட்டார் என, சமூக வலைதளங்களில் அவரின் பெயரில் அறிக்கை ஒன்று வெளியானது. அந்த அறிக்கைக்கும், தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என மறுத்த ரஜினிகாந்த், அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள சில தகவல்கள் உண்மையானவை என ஒப்புக் கொண்டார்.

இதனால் ரஜினி காந்த் கட்சி துவக்குவாரா மாட்டாரா என்ற கேள்வி, அரசியல் வட்டாரங்களில் எழுந்தது. அதற்கு பதில் அளிக்கும் விதமாக அரசியல் நிலைப்பாடு குறித்து, மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்து முடிவை அறிவிப்பேன் என டுவிட்டர் வாயிலாக ரஜினிகாந்த் தெரிவித்திருந்தார். இந்நிலையில் நேற்று அவர் தன் மன்றக் கூட்டத்தை கூட்டினார்.

சென்னை கோடம்பாக்கம் ராகவேந்திரா திருமண மண்டபத்தில் மக்கள் மன்ற மாவட்ட நிர்வாகிகளுடன் ரஜினிகாந்த் நேற்று ஆலோசனை நடத்தினார். சுமார் 2 மணி நேரம் நடந்த இந்த ஆலோசனையின் போது, கட்சி தொடங்கினால் தற்போதைய சூழலில் வரவேற்பு எப்படி இருக்கும்? என ரஜினிகாந்த் கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது. அதற்கு நிர்வாகிகள் பதிலளித்தனர்.

சட்டசபை தேர்தலுக்கு குறுகிய காலமே உள்ளதே… இந்நிலையில் தனித்துப் போட்டியிடுவது சாத்தியமா…?’ என்று நிர்வாகிகளிடம் ரஜினி கேள்வி எழுப்பினார்.

கூட்டணி அமைத்து தேர்தலை சந்திப்போம் என்று அப்போது நிர்வாகிகள் பதிலளித்தனர்.

பெயருக்கு கட்சியைத் துவக்கி தேர்தலில் வெறும் 10 – 15% வாக்குகளைப் பெற்று தோல்வி அடைய விரும்பவில்லை என்று கூறிய ரஜினி தேர்தலில் நின்றால் வெற்றி பெற வேண்டும் என்பதை திட்டவட்டமாக சொன்னாராம்.

இந்தக் கூட்டத்தில் மக்கள் மன்றத்தின் மாவட்டச் செயலாளர்கள் 38 பேர் பங்கேற்றனர்.

ஆலோசனை கூட்டத்தில், மக்கள் மன்ற நிர்வாகிகள் செயல்பாடுகளில் திருப்தி இல்லை என தெரிவித்த ரஜினி என் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் சில நிர்வாகிகள் செயல்படுகின்றனர் அதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளன என்று பகிரங்கமாக சொன்னாராம்.

தேர்தலுக்கு முன் கட்சி தொடங்கலாமா? தனித்து போட்டியிடலாமா அல்லது கூட்டணியுடனா? மக்கள் மன்றத்தின் செயல்பாடுகளை பொதுமக்கள் எப்படி பார்க்கின்றனர்? கட்சி தொடங்கினால் மக்களின் வரவேற்பு எப்படி இருக்கும்? கொரோனா தொற்று இருக்கும் இக்காலக் கட்டத்தில் நம்முடைய பிரச்சாரம் எப்படி? ஆகிய கேள்விகளை நிர்வாகிகளிடம் கேட்டதாகத் தெரிகிறது.

கூட்டத்துக்குப் பிறகு, போயஸ்கார்டனில் உள்ள தனது இல்லத்துக்கு வெளியே ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், மாவட்ட செயலாளர்களுடைய கருத்தைக் கேட்டேன். அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று சொன்னார்கள். நானும் எனது கருத்தை பகிர்ந்து கொண்டேன்.

எனவே நான் எந்த முடிவை எடுத்தாலும் அனைவரும் கூட இருப்போம் என்று ரஜினி மன்ற நிர்வாகிகள் உறுதி அளித்துள்ளனர். விரைவில் நான் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் தெரிவிக்கிறேன்” என்று கூறினார். ஆக நேற்றைய கூட்டத்திற்கு பிறகும் கூட ரஜினி தனது இறுதி முடிவை அறிவிக்கவே இல்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து