எப்போது வேண்டுமானாலும் எங்கிருந்தும் படிக்கலாம்: கர்நாடக அரசுக் கல்லூரிகளில் டிஜிட்டல் கற்றல் அறிமுகம்

செவ்வாய்க்கிழமை, 1 டிசம்பர் 2020      இந்தியா
Yeddyurappa 2020 12 01

Source: provided

பெங்களூர் : அரசு உயர்கல்வி நிறுவனங்களில் 2020- 21ஆம் கல்வி ஆண்டில் இருந்து டிஜிட்டல் கற்றலை அடிப்படையாகக் கொண்ட கற்றல் மேலாண்மை அமைப்பை கர்நாடகா அறிமுகம் செய்துள்ளது. 

கற்றல் மேலாண்மை அமைப்புத் திட்டத்தை மாநில முதல்வர் எடியூரப்பா மற்றும் துணை முதல்வரும் உயர்கல்வித் துறை அமைச்சருமான அஸ்வத் நாராயண் ஆகிய இருவரும் நேற்று தொடங்கி வைத்தனர்.

அதைத் தொடர்ந்து எடியூரப்பா கூறும் போது, இத்திட்டம், 430 அரசுக் கல்லூரிகள், 87 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள், 14 அரசு பொறியியல் கல்லூரிகளில் செயல்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம் சுமார் 24 ஆயிரம் ஆசிரியர்கள் மற்றும் 4.5 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவர். ரூ.34.14 கோடி செலவில் மேற்கொள்ளப்பட உள்ள இத்திட்டம், 2,500 ஐ.சி.டி. தொழில்நுட்ப வகுப்புகளில் தொடங்கப்படும் என்று தெரிவித்தார்.

இத்திட்டம் மூலம் மாணவர்கள் பாட உபகரணங்களை எப்போது வேண்டுமானாலும் எங்கிருந்தும் பயன்படுத்திக் கொள்ள முடியும். இதனால் கற்பித்தல், கற்றல், தொடர்ச்சியான மதிப்பீட்டு நடவடிக்கைகள் ஆகியவை விரிவாக, முழுமையாக இருக்கும். இதனால் சமூகத்திலும் பொருளாதாரத்திலும் பின்தங்கிய மாணவர்கள் பயனடைவர்.

இதன் மூலம் மாநிலத்தின் 14 பல்கலைக் கழகங்களின் பாடத்திட்டங்கள் வெவ்வேறு மொழிகளில் பி.பி.டி, வீடியோ, வினாடி-வினா, கேள்வி பதில் எனப் பல்வேறு வடிவங்களில் கிடைக்கும்.  அதேபோல கற்றல் மேலாண்மை அமைப்பில் கல்வி தொடர்பான பல்வேறு கருத்துருக்கள் அறிவியல் பூர்வமாக மதிப்பீடு செய்யப்படும்.

இத்துடன் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்லூரிகளின் தரவரிசை, ஒட்டுமொத்த செயல்திறன் அறிக்கை, மாணவர்களின் பின்னூட்டம், உள்ளடக்கம் குறித்த மதிப்பீடு, வகுப்பறைகள் மற்றும் இணைய பயன்பாட்டை கண்காணித்தல் மற்றும் விரிவான பகுப்பாய்வு அறிக்கை ஆகிய வசதியும் உண்டு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து