முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வங்கக் கடலில் வலுவடைந்துள்ள புரெவி புயல் எதிரொலி: தென் தமிழகத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை: தமிழக அரசு தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கை

புதன்கிழமை, 2 டிசம்பர் 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : தென் வங்கக் கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புரெவி புயலாக வலுவடைந்துள்ளது. இதன் காரணமாக தென் தமிழகத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

வங்க கடலில் கடந்த 24-ம் தேதி நிவர் புயல் உருவாகி, மறுநாள் அதிகாலை 2.30 மணியளவில் புதுச்சேரிக்கும், மரக்காணத்துக்கும் இடையே கரையை கடந்தது. இதனால் வடமாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியது. அதன் தொடர்ச்சியாக மீண்டும் வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. 

இது தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற நிலையில், நேற்று முன்தினம் தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் உருவெடுத்தது. இதையடுத்து நேற்று முன்தினம் இரவு தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்று இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயலுக்கு புரெவி என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. 

இது மாலத்தீவு நாடு வழங்கிய பெயராகும். ஒவ்வொரு புயல் உருவாகும் போதும் அதற்கு பெயர் சூட்டப்படுவது வழக்கம். அந்த வகையில் வங்க கடல், அரபி கடல் பகுதிகளை ஒட்டியுள்ள நாடுகள் ஒவ்வொரு ஆண்டும் பெயர்களை குறிப்பிட்டு வழங்கும். அதன்படி, வங்காளதேசம், இந்தியா, ஈரான், மாலத்தீவு, மியான்மர், ஓமன், பாகிஸ்தான், கத்தார், சவுதி அரேபியா, இலங்கை, தாய்லாந்து, ஐக்கிய அரபு அமீரகம், ஏமன் ஆகிய 13 நாடுகள் தலா 13 பெயர்களை வழங்கியிருந்தன.  கடந்த மாதம் (நவம்பர்) 24-ம் தேதி ஒரு புயல் வங்க கடலில் உருவானது. அதற்கு ஈரான் நாடு வழங்கியிருந்த நிவர் என்ற பெயர் சூட்டப்பட்டது. நிவர் என்பதற்கு வெளிச்சம் என்று பொருள். இந்த நிலையில் தற்போது உருவான புயலுக்கு புரெவி என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. புரெவி என்பது ஒரு தாவரத்தின் பெயர் என கூறப்படுகிறது.  

இந்த புரெவி புயல், பாம்பனுக்கு 470 கி.மீ தொலைவிலும், குமரிக்கு 650 கி.மீ தொலைவிலும் மையம் கொண்டுள்ளது. இலங்கை திரிகோணமலைக்கு தென்கிழக்கில் 240 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளது. புரெவி புயல் கரையை கடக்கும் போது 100 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீச வாய்ப்பு  உள்ளது.

குமரி - பாம்பன் இடையே கரையை கடக்கும் போது 90 கி.மீ வேகத்தில் காற்று வீசும்.  புரெவி புயல் காரணமாக தென் மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்யும். வட தமிழகத்தில் 4-ம் தேதி ஒரு சில இடங்களில் மழை பெய்யும். குமரி, நெல்லை, தென்காசி ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்யும். தமிழகத்திற்கு 2 நாட்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

தென் வங்கக் கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நேற்று முன்தினம் இரவு புரெவி புயலாக வலுவடைந்தது.  இது அடுத்த 12 மணி நேரத்தில் மேலும் வலுவடைந்து இரவில் இலங்கையைக் கடக்கக் கூடும். இன்று காலை மன்னார் வளைகுடா வழியாக குமரிக்கடல் பகுதிக்கு நகரக் கூடும். 

இதன் காரணமாக ராமநாதபுரம், கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய அதி கனமழையும் விழுப்புரம், கடலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழையும் பெய்யக்கூடும். 

செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன மழையும் இதர மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் சூறாவளிக் காற்று மணிக்கு 45 கி.மீ. முதல் 55 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். இன்று தேனி, திண்டுக்கல், விருதுநகர், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களின் ஓரிரு பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும். 

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அடுத்த 48 மணி நேரத்துக்கு நகரின் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். அதிகபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸாக இருக்கும். 

தென்கிழக்கு வங்கக் கடல், குமரிக் கடல், மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 65 கி.மீ. முதல் 75 கி.மீ. வேகத்திலும் இடையிடையே 90 கி.மீ. வேகத்திலும் வீசும். இதனால் மீனவர்கள் அடுத்த 3 நாட்களுக்குப் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு புவியரசன் தெரிவித்தார். 

இன்று கேரளத்தின் திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம் திட்டை, ஆலப்புழை மாவட்டங்களில் அதிகனமழை பெய்யக் கூடும் என்றும் வெள்ளியன்று தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக் கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது. வட தமிழகத்திலும், புதுச்சேரியிலும் இன்று ஒரு சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தென் தமிழகம், தென் கேரள பகுதிகளில் இன்று கனமழை பெய்யக் கூடும் என்பதால் அப்பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குமரிக்கடல், மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோரம், கேரள கடலோர பகுதிகளுக்கு நேற்று முதல் 3 நாட்களுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே நேற்று மாலை மதுரை, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்தது. இதையொட்டி தமிழக அரசு புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது.

புரெவி புயலை முன்னிட்டு குமரி, தூத்துக்குடி, நெல்லை, இராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக புயல் பாதிப்பு அதிகம் ஏற்படும் பகுதிகள் கண்டறியப்பட்டு அங்குள்ள மக்களை உடனடியாக அப்புறப்படுத்த அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறது. குமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கடற்கரை கிராமங்களில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினரும் முகாமிட்டுள்ளனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து