புதுடெல்லி : புதிய பாராளுமன்ற கட்டுமான பணிகளுக்கு வரும் 10-ம் தேதி பிரதமர் மோடி அடிக்கல் நாட்டவுள்ளதாக மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்தார்.
சென்ட்ரல் லிஸ்டா திட்டத்தின் கீழ் புதிய நாடாளுமன்ற கட்டிடம், மத்திய தலைமை செயலகம் உள்ளிட்டவை கட்டப்படவுள்ளன. இதில் முக்கோண வடிவில் கட்டப்படவுள்ள புதிய பாராளுமன்ற கட்டிடம் தற்போதுள்ள பாராளுமன்ற கட்டிடத்தின் அருகே அமைக்கப்பட்டுள்ளது. புதிய பாராளுமன்ற கட்டிடத்தை ரூ. 861.9 கோடி செலவில் கட்டித்தருவதாக டாடா புராஜக்ட்ஸ் நிறுவனம் தெரிவித்தது.
இதையடுத்து கட்டுமான பணிகள் மேற்கொள்ளும் ஒப்பந்தம் அந்த நிறுவனத்துக்கு அளிக்கப்பட்டது. இந்நிலையில் வரும் 10-ம் தேதி புதிய பாராளுமன்றத்துக்கான கட்டுமான பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெறவுள்ளதாக மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா நேற்று தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டுவார் என்று ஓம் பிர்லா தெரிவித்தார்.