சென்னை : ரஜினிகாந்துக்கு கொரோனா பாதிப்பு இல்லை; பரிசோதனையில் அவருக்கு கொரோனா நெகடிவ் எனவும், ஐதராபாத்தில் தனிமை படுத்திக்கொள்ள உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் அடுத்த மாதம் தனி கட்சி தொடங்கி அரசியலில் ஈடுபட இருப்பதால், அதற்கு முன்பாக தனது காட்சிகளை படமாக்கி முடித்து விடும்படி ‘அண்ணாத்த’ படக்குழுவினரை அறிவுறுத்தினார்.
இதையடுத்து கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் நிறுத்தப்பட்ட படப்பிடிப்பு 9 மாதங்களுக்கு பிறகு கடந்த டிசம்பர் 14-ம் தேதி ஐதராபாத்தில் மீண்டும் தொடங்கி நடந்து வந்தது. இதில் ரஜினி, குஷ்பு, நயன்தாரா, மீனா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், படப்பிடிப்பில் 8 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் அண்ணாத்த படத்தின் ஷூட்டிங் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதையடுத்து படக்குழுவினர் அனைவருக்கும் கொரோனா சோதனை செய்யப்பட்டது. இதில் ரஜினிக்கு நெகட்டிவ் என தகவல் வெளியாகியுள்ளது. படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதால் ரஜினி சென்னை திரும்ப உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.