முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புனே நகரில் இருந்து தடுப்பூசி வினியோகம் இன்று துவக்கம்

திங்கட்கிழமை, 11 ஜனவரி 2021      இந்தியா
Image Unavailable

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணி 16-ந் தேதி தொடங்கும் என்று பிரதமர் நரேந்திரமோடி அறிவித்துள்ளார். அதற்கான ஏற்பாடுகள் நாடு முழுவதும் தீவிரமாக நடந்து வருகின்றன.

இந்தியாவில் ‘கோவி ஷீல்டு’, ‘கோவேக்சின்’ ஆகிய 2 மருந்துகளை பயன்படுத்துவதற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதில் கோவிஷீல்டு மருந்து இங்கிலாந்து ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக்தின் கண்டுபிடிப்பாகும். ஆனால் இந்த மருந்தை புனேவில் உள்ள சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனம் தயாரித்து வருகிறது. அவர்கள் இந்தியாவில் தடுப்பூசி போடுவதற்கு மருந்துகளை சப்ளை செய்கிறார்கள்.

கோவேக்சின் மருந்தை ஐதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த மருந்து சப்ளை செய்யப்படுவதற்கு சற்று தாமதம் ஆகும் என்று தெரிகிறது. இதனால் முதலாவதாக கோவிஷீல்டு மருந்தை பொதுமக்களுக்கு பயன்படுத்துகிறார்கள். இதற்காக சீரம் நிறுவனம் மருந்துகளை சப்ளை செய்வதற்கு தயார் நிலையில் உள்ளது.

மத்திய அரசுக்கும், சீரம் நிறுவனத்துக்கும் இடை யே மருந்தின் விலை தொடர்பாக பேரம் நடந்து வருகிறது. இதற்கான பேச்சு வார்த்தைகள் நீடித்து வருகின்றன. விலை நிர்ணயிக்கப்பட்டதும் உடனடியாக புனேவில் உள்ள மருந்து குடோனில் இருந்து மற்ற இடங்களுக்கு அனுப்பப்படும்.  80 சதவீத மருந்துகள் விமானம் மூலமே அனுப்பப்பட உள்ளது. குறுகிய தூர இடங்களுக்கு மட்டும் விசே‌ஷ வேனில் அனுப்புகின்றனர்.

மருந்துகள் குளிர்சாதன பெட்டியில் வைத்து அனுப்பப்படுகிறது. எனவே அதற்கான வசதிகளுடன் அவற்றை அனுப்ப ஏற்பாடு செய்திருக்கிறார்கள். இதற்காக மும்பையை சேர்ந்த கூல் எக்ஸ் கோல்டு செயின் லிமிடெட் என்ற நிறுவனத்தை ஒப்பந்தம் செய்துள்ளனர். விலை நிர்ணயம் முடிவு ஆனவுடனேயே உடனடியாக குடோனில் இருந்து மருந்துகளை விமான நிலையத்திற்கு கொண்டு செல்வார்கள். அங்கிருந்து ஒவ்வொரு பகுதிக்கும் கொண்டு செல்லப்படும்.

முதலாவதாக 2 லட்சம் டோஸ் மருந்துகளை சப்ளை செய்வதற்கு சீரம் நிறுவனம் தயாராக வைத்துள்ளது. அவற்றை அனைத்து இடங்களுக்கும் கொண்டு செல்வதற்கு ஒரு வாரம் வரை ஆகும் என்றும் ராகுல் அகர்வால் கூறினார். விமான நிலையங்களில் மருந்துகளை ஏற்றுவதற்கும், இறக்குவதற்கும் தனியாக குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

நிறுவனத்தில் இருந்து மருந்துகளை விமான நிலையம் கொண்டு செல்லும் வரை அதற்கு போலீஸ் பாதுகாப்பு வேண்டும் என்று கேட்டுள்ளனர். எனவே மகாராஷ்டிர போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்துள்ளனர்.  முதலாவதாக விமானத்தில் ஏற்றி ஒவ்வொரு மாநிலங்களில் உள்ள விமான நிலையங்களுக்கு கொண்டு செல்லப்படும். அங்கு ஏற்பாடு செய்துள்ள குடோனில் அதை முதலில் வைப்பார்கள். பின்னர் அங்கிருந்து வாகனங்கள் மூலம் வேறு குடோன்களுக்கு அனுப்பப்படும்.

பணிகள் தொடங்கியதும் குடோன்களில் இருந்து மருந்து ஊசி போடும் அந்தந்த மையத்திற்கு எடுத்து செல்லப்படும். இந்த மருந்தை பாட்டிலில் இருந்து திறந்ததும் 4 மணி நேரத்திற்குள் ஊசி போட்டுவிட வேண்டும். ஒரு பாட்டிலில் 10 பேருக்கான மருந்து இருக்கும். எனவே ஊசி போட 10 பேர் வந்ததற்கு பிறகுதான் பாட்டிலை திறந்து பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து