அனைத்து மாநிலங்களுக்கும் இன்று இரவுக்குள் கொரோனா மருந்து சப்ளை: சுகாதார துறை அதிகாரிகள் தகவல்

புதன்கிழமை, 13 ஜனவரி 2021      இந்தியா
Corona-vaccine 2020 11 07

Source: provided

புதுடெல்லி : நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களுக்கும் கோவிஷீல்டு, கோவேக்சின் மருந்துகள் இன்று இரவுக்குள் சப்ளை செய்யப்பட்டு விடும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்தியாவில் 16-ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது. சீரம் நிறுவனம் தயாரித்துள்ள கோவிஷீல்டு, பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள கோவேக்சின் ஆகிய 2 மருந்துகளையும் இந்தியாவில் பயன்படுத்துவதற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.  இதில் முதல்கட்டமாக ஒரு கோடியே 10 லட்சம் கோவிஷீல்டு மருந்துகளையும், 55 லட்சம் கோவேக்சின் மருந்துகளையும் கொள்முதல் செய்வதற்கு மத்திய அரசு ஆர்டர் கொடுத்தது. 

இதையடுத்து நேற்று முன்தினம் இரு நிறுவனங்களும் மருந்து சப்ளையை தொடங்கின. புனேயில் உள்ள சீரம் நிறுவனத்தில் இருந்து அதிகாலையில் இருந்தே பல்வேறு இடங்களுக்கு விமானங்கள் மூலம் கோவிஷீல்டு மருந்துகள் அனுப்பி வைக்கப்பட்டன. இதேபோல பாரத் பயோடெக் நிறுவனம் தனது தொழிற்சாலையில் இருந்து ஐதராபாத் விமான நிலையத்திற்கு மருந்துகளை அனுப்பி வைத்தது. அங்கிருந்து விமானங்கள் மூலம் பல்வேறு மாநிலங்களுக்கு பிரித்து அனுப்பி வைக்கப்பட்டன. 

கோவிஷீல்டு மருந்துகள் 13 நகரங்களுக்கு நேற்றுமுன்தினம் அனுப்பி வைக்கப்பட்டது. அதேபோல கோவேக்சின் மருந்துகள் 11 இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.   அதேபோல பாரத்பயோடெக் நிறுவனமும் மருந்து சப்ளையை விரைவாக முடிக்க ஏற்பாடுகளை செய்துள்ளது. இன்று இரவுக்குள் 2 மருந்துகளும் அனைத்து மாநிலங்களுக்கும் சப்ளை செய்யப்பட்டுவிடும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.   தற்போது ஒரு கோடியே 65 லட்சம் டோஸ் மருந்துகள் மட்டுமே சப்ளை செய்யப்படுகிறது. குறிப்பிட்ட அளவிற்கு தடுப்பூசி போடப்பட்டதும் மீண்டும் மத்திய அரசு மருந்துகளை கொள்முதல் செய்ய உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து