நாட்டு நடப்பு தெரியாத கமல் பேசி வருகிறார்: அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்

புதன்கிழமை, 13 ஜனவரி 2021      தமிழகம்
jayakumar-2020 11 05

Source: provided

சென்னை : நாட்டு நடப்பு தெரியாமல் கமலஹாசன் பேசி வருகிறார் என்று அமைச்சர் ஜெயகுமார் விமர்சித்துள்ளார். 

சென்னை ராயபுரம் பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு நேற்று தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் இலவச மிதிவண்டிகளை வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

வேளாண் சட்டம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட் அளித்துள்ள தீர்ப்பை விமர்சிக்கக் கூடாது. தீர்ப்பு குறித்து மத்திய அரசுதான் முடிவு செய்யும். வேளாண் சட்டம் குறித்து தமிழக முதல்வர் விளக்கம் அளித்துள்ளார்.

அதில், விவசாயிகளுக்கு பாதிப்பில்லை என தெளிவுபடுத்தி இருக்கிறார். அ.தி.மு.க. கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான். அ.தி.மு.க. கூட்டணியில்தான் பா.ம.க. உள்ளது.

கூட்டணி வேறு, கொள்கை வேறு. வன்னியர்களுக்கு 20 சதவிகித இடஒதுக்கீடு தொடர்பாக, ஜாதிவாரி கணக்கெடுப்பு முடித்து அரசுக்கு அறிக்கை வந்த பிறகுதான் முடிவு செய்யப்படும். நாட்டு நடப்பு தெரியாமல் கமல்ஹாசன் பேசி வருகிறார்.

அவர் அன்றன்று நடைபெறும் செய்திகளை பார்க்காமல், டி.வி. நிகழ்ச்சியில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து