ஜனநாயக மாண்பை பின்பற்றி நடப்போம் : மதுரை ஆதீனம் பொங்கல் தின வாழ்த்து

புதன்கிழமை, 13 ஜனவரி 2021      தமிழகம்
Aadeenam 2020 11 08

Source: provided

மதுரை : ஜனநாயக மாண்பினை பின்பற்றி நடப்போம் என்று மதுரை ஆதீனம் விடுத்துள்ள பொங்கல் தின வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார். 

இது குறித்து மதுரை ஆதீனகர்த்தர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது, 

நம் தமிழ் மக்கள் உலகின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் உழவுத் தொழிலின் இன்றியமையாமையையும் உழவரின் சிறப்பையும் உலகறிய செய்யவும் உழவுக்கு ஆதாராமான இயற்கைக்கு நன்றிக்கடனை தெரிவிப்பதற்குமான நாளாக இத்திருநாளை கொண்டாடி வருகின்றோம். இன்றைய காலகட்டத்தில் மக்கள் பல தொழிலநுட்ப முன்னேற்றங்களாலும் விவசாயம் சாரா தொழில்களின் நவீன மயமாக்கத்தாலும் விவசாயத்தினை விட்டு இயற்கையின் பிணைப்பில் இருந்து மிக வேகமாக விலகி சென்று கொண்டிருக்கின்றோம்.

உலகின் அறிஞர்கள் பலரும் விவசாயமே, மனித வாழ்வின் ஆதாரம். விவசாயமே தேசத்தின் ஆதாரம். விவாயம் இன்றேல் உலகின் எத்தொழிலும் இயங்காது என பல கருத்துக்களை தெரிவித்தாலும் நாம் அவற்றை எண்ணி மனதார உணர்ந்து செயல்பட்டால் மாத்திரமே வேளாண் தொழில் சிறந்து மனித குலம் சீர்பெறும். 

தற்சமயம் உலகளாவிய நோய் தொற்றான கொரோனா நமக்கு உணவின் இன்றியமையாமையை உணர்த்தியுள்ளது. பொது முடக்கம் என்றவுடன் நம் அனைவரின் எண்ணங்களிலும் வந்து தேடி ஓடியது உணவு பொருட்கள் மாத்திரமே. எனவேதான். திருவள்ளுவர் உழவு என்ற அதிகாரத்தையே அமைத்து அதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி உள்ளார். உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம் தொழுதுண்டு பின்செல்பவர் என்று கூறியது போல் நாம் எப்படிப்பட்ட உயர்ந்த வருமானம் ஈட்டக் கூடிய தொழில் செய்தாலும் விவசாயத்தை சார்ந்து மாத்திரமே வளமுடன் வாழ முடியும்.

விவசாயம் அன்றி தன்னிறைவு பெற்று எவராலும் வாழ இயலாது. நமது மாநில அரசும், மத்திய அரசும் உழவுத் தொழில் சிறந்தால் தான் இந்த தேசம் வளமுடன் சிறந்து விளங்கும் என்ற உண்மையை கருத்தில் கொண்டு விவசாயத்தையும் விவசாயிகளையும் உயர்வடைய செய்ய வேண்டும் என்ற அடிப்படையில் பல வேளாண் சட்டங்களை இயற்றி வேளாண் தொழிலின் பாதுகாப்பினை உறுதி செய்து வருகின்றனர். 

உலகின் பல்வேறு பகுதிகளில் வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. அப்படிப்பட்ட வன்முறை செயல்களால் சமுதாயத்தில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படாது. தற்சமயம் அமெரிக்க பாராளுமன்றத்தில் நடந்த வன்முறை சம்பவம் உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அந்த வன்முறை செயல்களால் மக்கள் நிம்மதியற்ற சூழ்நிலைக்கு செல்வார்களே தவிர எவ்வித பயனும் அடையப் போவதில்லை.

ஜனநாயக முறைப்படி தேர்தலில் வென்றவருக்கு பெருந்தன்மையோடு வழிவிட்டு இருப்பதே சிறந்த நாகரீகமான மனிதருக்கு அடையாளம். உலகின் பல்வேறு நாட்டினரும் பல்வேறு மதத்தினரும் உலக மக்களுக்கு உணவு வழங்கும் உழவு தொழிலினை கடவுளாக கொண்டாடி வணங்கி வழிபட்டு வருகின்றனர். அனைத்து சாதியினரும், அனைத்து மதத்தினரும் இணைந்து கொண்டாடும் இந்த பொங்கல் பண்டிகையே தமிழர் திருவிழாவான அறுவடை பண்டிகையாகும்.

உணவு என்பது சாதி, சமய வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு அனைத்து மக்களுக்குமான ஆதாரமாகும். எனவே தான் இதனை உணவு திருவிழா என்று சொல்கிறோம். அனைத்து மக்களும் இந்தியர் என்ற உணர்வுடனும், ஜனநாயக மாண்பினை பின்பற்றி நடப்போமாக. எல்லோருக்கும் தமிழர் திருநாள் மற்றும் பொங்கல் வாழ்த்துக்களை கூறி ஆசீர்வதிக்கின்றோம். இவ்வாறு மதுரை ஆதீனகர்த்தர் தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து