தென் மாவட்டங்களில் கனமழை நீடிக்கும்: கன்னியாகுமரி அருகே காற்றழுத்த தாழ்வு நிலை: மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

புதன்கிழமை, 13 ஜனவரி 2021      தமிழகம்
Weather-Center 2020 12-01

Source: provided

சென்னை : கன்னியாகுமரி அருகே நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தென் மாவட்டங்களில் கனமழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. லட்சத்தீவு, கன்னியாகுமரி இடையே காற்றழுத்த தாழ்வு நிலை நிலைகொண்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது. 

கடந்த சில நாட்களாகவே தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. கடந்த 5-ம் தேதி சென்னையில் இரவு முதல் விடாமல் தொடர்ந்து 14 மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்தது. புயல் உருவாகினாலோ, காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகினாலோ எவ்வாறு மழை பொழியுமோ அதேஅளவில் இந்த மழை பொழிந்தது.  வடகிழக்கு பருவமழை கடந்த 11-ம் தேதி வரை தமிழகத்தில் மழை நீடிக்கும் எனவும், படிப்படியாக அதன் தாக்கம் குறையும் எனவும் ஏற்கனவே கூறப்பட்டது.

எனினும் இன்றளவும் மழையின் தாக்கம் குறையாமல் உள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முடிவுக்கு வராமல் இருப்பதாகவும் இந்த மாதம் இறுதியில் மீண்டும் மழை தொடங்கி பிப்ரவரி வரை நீடிக்கும் என்றும் தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்திருந்தார். பொதுவாக குளிர் காலத்தில் மழை பெய்யாது. ஆனால் தற்போது குளிர் காலத்தில் மழையும் பெய்கிறது. 

இதனால் தமிழகத்திற்கு இந்த முறை குளிர் காலம் இல்லாமலேயே போய் விட்டது. இந்நிலையில், கன்னியாகுமரி அருகே வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காற்றழுத்த தாழ்வு நிலையாக உருவாகியுள்ளதாகவும், காற்றழுத்த தாழ்வு நிலை லட்சத்தீவுக்கும், கன்னியாகுமரி இடையே நிலை கொண்டுள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

இந்நிலையில் அடுத்த 24 மணி நேரத்தில் நெல்லை, தூத்துக்குடியில் கனமழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  மேலடுக்கு சுழற்சியால் கடலோர மற்றும் உள் மாவட்டங்களில் லேசான மழை பெய்யும் என்றும் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து