முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கல்வானில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களின் தியாகம் வீண் போகாது: தளபதி நரவனே

வெள்ளிக்கிழமை, 15 ஜனவரி 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : கல்வான் பள்ளத்தாக்கில் வீரமரணம் அடைந்த இந்திய ராணுவ வீரர்களின் தியாகம் வீண் போகாது என ராணுவ தளபதி நரவனே தெரிவித்துள்ளார்.

ஆங்கிலேயர்களிடம் இருந்து இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு 1949-ம் ஆண்டு ஜனவரி 15-ம் தேதி, சுதந்திர இந்தியாவின் முதல் ராணுவ தளபதியாக ஜெனரல் கே.எம்.கரியப்பா பொறுப்பேற்றார். இதனை நினைவுகூறும் விதமாக ஆண்டுதோறும் ஜனவரி 15-ம் தேதி இந்திய ராணுவ தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் ராணுவ வீரர்கள் மற்றும் போரில் உயிர்நீத்த தியாகிகளுக்கு மரியாதை செய்யப்பட்டு வருகிறது.

அந்த வகையில் நேற்று இந்திய ராணுவ தினம் கொண்டாடப்பட்டது.  டெல்லியில் இந்திய ராணுவத்தின் பெருமையை பறைசாற்றும் விதமாக ராணுவ அணிவகுப்பு நடைபெற்றது. இந்த நிகழ்வில் ராணுவ தளபதி முகுந்த் நரவனே உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது;-

கடந்த ஆண்டு ஜூன் மாதம் 15-ம் தேதி லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் இந்தியா - சீனா ராணுவத்தினரிடையே நடந்த மோதலில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். அவர்களின் தியாகம் ஒருநாளும் வீண் போகாது.  நாம் அமைதி பேச்சுவார்த்தைகள் மூலம் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முயற்சித்து வருகிறோம்.

ஆனால் நமது பொறுமையை சோதித்துப் பார்க்க நினைத்தால் அவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும். இந்தியாவின் பாதுகாப்பிற்கும், இறையாண்மைக்கும் பாதிப்பு ஏற்பட இந்திய ராணுவம் அனுமதியளிக்காது. 

பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் இருந்து இந்தியாவிற்குள் ஊடுருவ சுமார் 300 முதல் 400 பயங்கரவாதிகள் வரை தயார் நிலையில் உள்ளனர். பாகிஸ்தான் அரசு பயங்கரவாதிகளுக்கு தொடர்ந்து பாதுகாப்பு அளித்து வருகிறது. கடந்த ஆண்டு மட்டும் பாகிஸ்தான் நடத்திய அத்துமீறிய தாக்குதல்கள் 40 சதவீதம் அதிகரித்துள்ளன.

அந்த நாட்டின் மோசமான திட்டங்களுக்கு இது ஒரு சான்றாகும்.  கடந்த ஒரு ஆண்டில் எல்லை கட்டுப்பாட்டுப் பகுதியில் 200-க்கும் அதிகமான பயங்கரவாத தாக்குதல்களை இந்திய ராணுவம் முறியடித்துள்ளது.

இந்திய ராணுவத்தை நவீனமயமாக்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு இந்திய ராணுவம் சுமார் 5,000 கோடி ரூபாய் மதிப்புள்ள ராணுவ உபகரணங்களை வாங்கியுள்ளது. மேலும் மூலதன கொள்முதல் அடிப்படையில் கடந்த ஆண்டில் 13,000 கோடி ரூபாய் மதிப்புள்ள ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது.  இவ்வாறூ அவர் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து