சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 2 விக்கெட்டை வீழ்த்தினார் தமிழகத்தை சேர்ந்த நடராஜன்: முதல் இந்தியர் எனும் சாதனை படைத்த நெட் பவுலர்

வெள்ளிக்கிழமை, 15 ஜனவரி 2021      விளையாட்டு
Natarajan 2021 01 15

Source: provided

பிரிஸ்பேன் : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் விக்கெட்டை தமிழகத்தை சேர்ந்த நடராஜன் வீழ்த்தினார். களமிறங்கிய முதல் டெஸ்ட் போட்டியிலேயே விக்கெட் வீழ்த்தி அசத்தினார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் நடந்து வருகிறது. சிறப்பாக ஆடி வந்த லபுசாக்னே, மாத்யூ வேட் கூட்டணியை நடராஜன் உடைத்தார்.

மாத்யூ வேட் விக்கெட்டை வீழ்த்தி நடராஜன் அசத்தினார். இந்திய அணியில் வலைப்பயிற்சி பந்துவீச்சாளராக ஆஸ்திரேலியத் தொடருக்கு வந்து அனைத்துப் பிரிவுகளிலும் அறிமுகமான முதல் இந்திய வீரர் டி.நடராஜன் என்று ஐ.சி.சி. பாராட்டு தெரிவித்துள்ளது. டி.என்.பி.எல். லீக்கில் விளையாடிய நடராஜனின் திறமையைப் பார்த்த கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணி, கடந்த 2017-ம் ஆண்டு ரூ.3 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.

ஆனால் நடராஜனுக்கு ஒரு போட்டியில்கூட வாய்ப்பு வழங்கவில்லை. ஆனால் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த ஐ.பி.எல். தொடரில் நடராஜன் பெயர் அனைவராலும் உச்சரிக்கப்பட்டது. 13-வது ஐ.பி.எல் சீசனில் அனைத்து ரசிகர்களின் கவனத்தையும் தனது யார்க்கர் பந்துவீச்சால் ஈர்த்தவர் தமிழக வீரர் நடராஜன். சன்ரைசர்ஸ் அணி,

நடராஜனின் திறமையை அடையாளம் கண்டு அவரைப் பட்டை தீட்டியது. நடராஜனின் அபாரமான பந்துவீச்சு திறமையால், முதல் முறையாக ஆஸ்திரேலியத் தொடருக்கான இந்திய அணியில் வலைப்பயிற்சிப் பந்துவீச்சாளராக இடம் பெற்றார். டெஸ்ட் தொடரில் நடராஜனால் சாதிக்க முடியுமா, போதுமான அனுபவம் இல்லை.

சிவப்பு பந்துவீச்சில் பக்குவப்படாத வீரர், உள்நாட்டுப் போட்டிகளில் அதிகம் விளையாடாத வீரர் என்று பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. இதனால் டெஸ்ட் தொடரில் நடராஜன் களமிறங்குவாரா என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் பிரிஸ்பேன் நகரில் நடந்துவரும் கடைசி டெஸ்ட் போட்டியில் பும்ரா காயத்தால் விலகவே அந்த வாய்ப்பு நடராஜனுக்குக் கிடைத்துள்ளது. இந்தப் போட்டியிலும் தொடக்கத்திலிருந்து சிறப்பாகவே நடராஜன் பந்துவீசி வருகிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து