முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கடந்த 6 நாட்களாக பெய்த கனமழை: வெள்ளத்தில் மிதக்கிறது தூத்துக்குடி

சனிக்கிழமை, 16 ஜனவரி 2021      தமிழகம்
Image Unavailable

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த அக்டோபர் மாதம் இறுதியில் வடகிழக்கு பருவமழை பெய்யத் தொடங்கியது. ஆனாலும் அவ்வப்போது லேசான சாரல் மழை பெய்து வந்தது. பருவமழை முடிந்து விடும் என்று எதிர்பார்த்த நிலையில் கடந்த 6 நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்தது. 

இரவு, பகலாக இடைவிடாமல் கனமழை கொட்டியது. இதனால் தூத்துக்குடியில் பல இடங்களில் மழைநீர் குளம்போல் தேங்கி கிடக்கிறது. நேற்று காலை முதல் லேசான வெயில் அடித்தது. மாலையில் மீண்டும் வானம் மேகமூட்டமாக காணப்பட்டது. ஏற்கனவே தூத்துக்குடி-திருச்செந்தூர் ரோட்டில் மழை வெள்ளம் தேங்கியதாலும், ஸ்மார்ட்சிட்டி சாலை பணிகள் நடப்பதாலும் போக்குவரத்து முற்றிலும் முடக்கப்பட்டு உள்ளது. இதனால் அனைத்து வாகனங்களும் பிரையண்ட்நகர் வழியாக சுற்றி சென்று வருகின்றன. பிரையண்ட்நகர் பகுதியிலும் அனைத்து இடங்களிலும் தண்ணீர் தேங்கி நிற்பதால், மக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர். 

அதேபோன்று திருச்செந்தூர் ரோடு, சிவந்தாகுளம் ரோடு சந்திப்பு பகுதியில் நீண்ட நாட்களாக தண்ணீர் தேங்கி நிற்கிறது. தற்போது அங்கு சுமார் 1 அடி உயரத்துக்கு தண்ணீர் தேங்கி நிற்கிறது. இந்த மழைநீருடன் கழிவுநீரும் கலந்து துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் தொற்று நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டு உள்ளது. 

தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக, தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் அருகே புன்னக்காயலில் வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. 

தூத்துக்குடியில் பல இடங்களில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். பெரும்பாலான மக்கள், தங்கள் வீடுகளை காலி செய்து விட்டு மேடான பகுதிகளில் உள்ள தங்கள் உறவினர்களின் வீடுகளுக்கு சென்று உள்ளனர். பல ஆயிரக்கணக்கான வீடுகளை மழை நீர் சூழ்ந்து நிற்கிறது. இதனால் வீட்டில் இருந்து வெளியில் வர முடியாத நிலையில் ஏராளமான மக்கள் தவித்துக் கொண்டு இருக்கின்றனர். தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் சுமார் 1 அடி உயரத்துக்கு தண்ணீர் தேங்கி நிற்பதால், நோயாளிகள் மருத்துவமனைக்கு செல்ல மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். தூத்துக்குடி மாநகரமே தண்ணீரில் மிதந்து கொண்டிருக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து