பெங்களூர் : விவசாயிகளின் வருமானத்தை இருமடங்காக்குவதை வேளாண் சட்டங்கள் உறுதி செய்யும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார்.
கர்நாடகா மாநிலத்தில் இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அமித்ஷா, நேற்று அங்கு பல்வேறு வேளாண் திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர்,
ஆட்சிக்கு வந்தநாள் முதல் நரேந்திர மோடி அரசு வேளாண் குடிமக்களின் வருவாயை இருமடங்காக உயர்த்துவது என்ற மிகப் பெரிய இலக்கை நோக்கி செயல்படுகிறது. அந்த வரிசையில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்கள் விவசாயிகளின் வருமானத்தை பலமடங்கு உயர்த்த உதவும். இதன் மூலம் விவசாயிகள் தங்களின் விலை பொருட்களை உலகின் எந்த பகுதியில் வேண்டுமானால் விற்கலாம்.
ஆனால், காங்கிரஸ் கட்சியினர் இவற்றையெல்லாம் கருத்தில் கொள்ளாமல், தேவையில்லாமல் விவசாயிகளைத் தூண்டிவிட்டு போராட வைக்கின்றனர். அப்படித் தூண்டிவிடுபவர்களிடம் நான் ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன். விவசாயிகள் மீது உங்களுக்கு உண்மையிலேயே அக்கறை இருந்தால் உங்கள் ஆட்சியில் ஏன் விவசாயிகளுக்கு ரூ. 6000 மானியம் அளிகவில்லை. அதேபோல், எத்தனால் கொள்கையை ஏன் மறு பரிசீலனை செய்யவில்லை என்று கூறினார்.
புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி விவசாயிகள் டெல்லி எல்லைகளில் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்தின் போது பல்வேறு காரணங்களால் 60 பேர் உயிரிழந்தனர். மேலும் குடியரசு தினத்தில் டெல்லியை நோக்கி டிராக்டர் பேரணி நடத்த விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர். இந்தப் பேரணிக்கு எதிரான மத்திய அரசின் மனு இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வருவது குறிப்பிடத்தக்கது.