முடியும் தருவாயில் ஜெயலலிதா நினைவிட கட்டுமானப் பணி: முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று டெல்லி பயணம்: திறப்பு விழாவிற்கு பிரதமரை அழைக்க திட்டம்

ஞாயிற்றுக்கிழமை, 17 ஜனவரி 2021      தமிழகம்
Edappadi 2020 11-16

Source: provided

சென்னை : சென்னை மெரினா கடற்கரையில் எம்.ஜி.ஆர். நினைவிடம் அருகே மிகப் பிரமாண்டமாக அமைக்கப்பட்டு வரும் ஜெயலலிதா நினைவிட கட்டுமான பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. இந்த பணிகள் முடிக்கப்பட்டு விரைவில் திறப்பு விழா காணப்படும் என தெரிகிறது. இதற்காகவும் பிரதமரை நேரில் சந்தித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுப்பார் என்றும் கூறப்படுகிறது. 

முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று டெல்லி செல்கிறார். அங்கு அவர் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட தலைவர்களை அவர் சந்தித்து பேச உள்ளார்.  இன்று பிற்பகலில் சென்னையில் இருந்து டெல்லி புறப்படும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் இன்று இரவு தங்குகிறார்.

நாளை பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்களை அவர்  சந்திக்கிறார். இந்தச் சந்திப்பின் போது நிவர் மற்றும் புரவி புயல்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மத்திய அரசு நிவாரண நிதியை விரைவில் விடுவிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்க உள்ளார். மேலும், துறை வாரியாக தேவைப்படும் உதவிகளுக்கான கோரிக்கை மனுக்களையும் அவர் சமர்ப்பிப்பார் என்று கூறப்படுகிறது. 

மெரினா கடற்கரையில் எம்.ஜி.ஆர். நினைவிடம் அருகே ஜெயலலிதா நினைவிடம் மிகப் பிரமாண்டமாக அமைக்கப்பட்டு வருகிறது. இரவு பகலாக முழு வீச்சில் பணிகள் நடைபெற்று வருகின்றன. தனது சாம்பலிலிருந்து, தானே எழுந்து வரும் இறப்பில்லா பறவையாக, உலக இலக்கியங்களில் சித்தரிக்கப்படும் பீனிக்ஸ் பறவையின் வடிவில், மொத்தம் 79.75 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஜெயலலிதா நினைவிடம் அமைக்கப்படுகிறது. அதனை, அடுத்து வரும் 5 ஆண்டுகளுக்கு பராமரிப்பதற்கான நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

ஜெயலலிதாவின் வாழ்வை விளக்கும் அருங்காட்சியகம், அறிவு சார் பூங்கா, நீரூற்றுகள், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரது திருவுருவச் சிலைகள், புல்வெளிப் பூங்கா என்று, உலகத்தரத்தில் அமைக்கப்பட்டு வரும் ஜெயலலிதாவின் நினைவிடத் திறப்பு விழா, அ.தி.மு.க. வரலாற்றில் ஒரு மைல் கல்லாக அமையும் என்பதில் ஐயமில்லை.  ஜெயலலிதா நினைவிடம் அமைக்கும் பணியை முதல்வர்   எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் நேரில் சென்று பார்வையிட்டு பல்வேறு ஆலோசனைகளை வழங்கி பணிகளை முடுக்கி விட்டுள்ளனர்.

இந்த நிலையில் கடந்த 12-ம் தேதி முதல்வர்  எடப்பாடி பழனிசாமி, ஜெயலலிதா நினைவிடம் சென்று அங்கு நடைபெற்று வரும் பணிகளை பார்வையிட்டு விரைவாக முடிக்கும்படி அறிவுறுத்தினார்.  முதல்வருடன்  அமைச்சர் ஜெயக்குமார், மாவட்ட செயலாளர்கள் பாலகங்கா, தி.நகர் சத்யா எம்.எல்.ஏ., விருகை வி.என். ரவி எம்.எல்.ஏ., ஆதிராஜாராம், எம்.கே. அசோக் உட்பட பலர் உடன் சென்றிருந்தனர்.  

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தை அமைக்கும் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. இந்தப் பணிகள் முடிக்கப்பட்டு நினைவிடம் விரைவில் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், நினைவிடத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்க வாய்ப்புகள் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்காகவும் பிரதமரை நேரில் சந்தித்து எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுப்பார் என்றும் கூறப்படுகிறது. தனது டெல்லி பயணத்தின் போது மத்திய அமைச்சர்கள், பாரதீய ஜனதாவை சேர்ந்த பல்வேறு தலைவர்களையும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து