புதுடெல்லி : இந்தியாவில் தொடங்கப்பட்ட கொரோனா தடுப்பூசித் திட்டத்தையொட்டி பிரதமர் நரேந்திர மோடிக்கு இலங்கை பிரதமர் ராஜபக்சேச வாழ்த்து தெரிவித்துள்ளார். அதற்கு பிரதமர் மோடியும் நன்றி தெரிவித்து டுவீட் செய்துள்ளார்.
நாடு முழுவதும் நேற்று முன்தினம் (சனிக்கிழமை) கொரோனா தடுப்பூசி வழங்கும் பணி தொடங்கப்பட்டது. முதல் நாளில் மூன்று லட்சம் பேருக்கு தடுப்பூசி வழங்கத் திட்டமிடப்பட்ட நிலையில் 1.91 லட்சம் மக்கள் தடுப்பூசியை செலுத்திக் கொண்டனர்.
இது குறித்து இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே தனது டுவிட்டர் பக்கத்தில், உலகின் மிகப் பெரிய கொரோனா தடுப்பூசி திட்டத்தை இந்தியா துவக்கி உள்ளமைக்கு வாழ்த்துகள். இது மிகவும் முக்கியமான அடி. சீரழிக்கும் பெருந்தொற்றுக்கு முடிவு கட்டும் தருணம் தொடங்கி விட்டது எனப் பதிவிட்டிருந்தார். இதற்கு பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டரில் நன்றி தெரிவித்துள்ளார்.
அதில், எங்களுடைய விஞ்ஞானிகள், முன்களப் பணியாளர்களின் அயராத உழைப்பு இந்தப் பெருந்தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் முக்கியத்துவம் வாய்ந்தது. தடுப்பூசியை வேகமாகத் தயாரித்தது ஆரோக்கியமான நோயற்ற உலகை உருவாக்கும் உலக நாடுகளின் கூட்டுமுயற்சியில் முக்கியத்துவம் வாய்ந்த பணி எனக் கூறியுள்ளார்.