படேல் சிலை உள்ள கேவடியா பகுதிக்கு 8 புதிய ரயில் சேவை: பிரதமர் மோடி துவக்கி வைத்தார்

ஞாயிற்றுக்கிழமை, 17 ஜனவரி 2021      இந்தியா
Modi 2021 01 17

Source: provided

புதுடெல்லி : சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக குஜராத்தில் உள்ள ஒற்றுமை சிலை உள்ள கேவடியா பகுதிக்கு இயக்கப்படும் புதிய ரயில்கள் சேவையை பிரதமர் மோடி துவக்கி வைத்தார்.

குஜராத் மாநிலம், நர்மதா மாவட்டம் கேவடியா பகுதியில், நர்மதை ஆற்றங்கரையில் மறைந்த முன்னாள் மத்திய உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் படேலின் பிரமாண்ட சிலை அமைக்கப்பட்டுள்ளது. ஒற்றுமை சிலை என்று அழைக்கப்படும் இச்சிலை, மிகப்பெரிய சுற்றுலா தலமாக மாறியுள்ளது.   

இந்நிலையில், சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில், கேவடியா பகுதியுடன் நாட்டின் பல்வேறு பகுதிகளை இணைக்கும் வகையில், 8 புதிய ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்களின் சேவையை பிரதமர் மோடி நேற்று காணொளி மூலமாக கொடியசைத்து தொடங்கி வைத்தார்.  

குஜராத்தின் கேவடியா பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநில முதல்வர் விஜய் ரூபானி, மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் ஆகியோர் கலந்து கொண்டனர். இதே போல் ரயில்கள் இயக்கப்படும் மற்ற பகுதிகளில் நடைபெற்ற நிகழ்ச்சியிலும் அந்தந்த மாநில முதல்வர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்று ரயில் சேவையை துவக்கி வைத்தனர்.

சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த பகுதிக்கு இயக்கப்படும் இந்த ரயில்களில் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இருக்கையில் இருந்து கொண்டே வெளியே இருப்பதை பார்க்கும் வகையில் ரயில் பெட்டிகளின் பக்கவாட்டு பகுதிகளும், மேற்கூரைகளிலும் கண்ணாடிகள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் மூலமாக ஒற்றுமை சிலையையும், அதை சுற்றியுள்ள இயற்கை அழகையும் கண்டு ரசிக்கலாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து