பெல்ஜியம் முதியோர் இல்லத்தில் 3 உயிர்களை பலி வாங்கிய உருமாறிய கொரோனா

திங்கட்கிழமை, 18 ஜனவரி 2021      உலகம்
Belgium 2021 01 18

பிரிட்டனில் கண்டுபிடிக்கப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸ் பல்வேறு நாடுகளுக்கும் பரவி தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. முந்தைய கொரோனா வைரசை விட, இந்த உருமாறிய வைரஸ் பரவும் வேகம் அதிகம் என்பதால் இந்த வைரஸ் குறித்த அச்சம் அதிகரித்துள்ளது. பிரிட்டனில் இருந்து வந்தவர்கள் மற்றும் பிரிட்டனில் இருந்து வேறு நாடுகள் வழியாக வந்தவர்கள் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறார்கள். கொரோனா பரிசோதனையுடன் கட்டாய தனிமைப்படுத்தல் நடவடிக்கையும் மேற்கொள்ளப்படுகிறது. 

இந்நிலையில் பெல்ஜியம் நாட்டிலும் உருமாறிய கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. வடமேற்கு பெல்ஜியத்தின் ஹவுத்தல்ஸ்ட் நகரில் உள்ள முதியோர் இல்லத்தில் உள்ள பலருக்கு அடுத்தடுத்து நோய்த்தொற்று ஏற்பட்டது. அவர்களின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதில் பிரிட்டனில் பரவி வரும் உருமாறிய கொரோனாவின் தாக்கம் இருந்தது தெரியவந்தது. 

39 ஊழியர்கள் உள்பட 111 பேருக்கு உருமாறிய கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இது முதியோர் இல்லத்தில் உள்ளவர்களில் மூன்றில் இரண்டு பகுதி ஆகும். பாதிக்கப்பட்டவர்களில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். மற்றவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. 

உருமாறிய கொரோனா பரவல் காரணமாக அந்த மாநகராட்சியில் அனைத்து சமூக மற்றும் விளையாட்டு நிகழ்வுகளும் நிறுத்தி வைக்கப்பட்டன. 

பெல்ஜியத்தில் பரவலாக பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வரும் நிலையில் இந்த ஊசியானது உருமாற்றம் பெற்ற இரண்டு கொரோனா வைரஸ்களுக்கு எதிராக செயல்படுவதாக சுகாதாரத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார். இது நோய்த்தடுப்பில் நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது. 

கொரோனாவால் இதுவரை 677,209 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 20,396 பேர் மரணம் அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து