10, 12–ம் வகுப்பு மாணவர்கள் சீருடை மற்றும், பழைய பாஸ் மூலம் அரசு பஸ்களில் பயணிக்கலாம்: அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்

திங்கட்கிழமை, 18 ஜனவரி 2021      தமிழகம்
M R Vijayabaskar 2021 01 18

10, 12-ம் வகுப்பு மாணவர்கள் சீருடை மற்றும் பழைய பாஸ் மூலம் அரசு பஸ்களில் செல்லலாம் என்று அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சென்னை எம்.ஜி.ஆர். சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பின்னர் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மின்சார பஸ் போக்குவரத்து திட்டம் எந்த வகையிலும் கைவிடப்படாது. கொரோனா காலத்தில் கடந்த மாதங்களில் அதற்கான பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு ‘பார்ம்-2’ என்ற திட்டத்தை கொண்டு வந்தது. அதில் மின்சார பஸ்களுக்கு மானியம் கொடுத்தார்கள். இப்போது அந்த திட்டம் கைவிடப்பட்டுள்ளது.

அதன் பின்னர் நாட்டிலேயே முதல் முறையாக சி40 என்ற ஒப்பந்தத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கையெழுத்திட்டுள்ளார். அதன்படி ஜெர்மன் ‘கே.எப்.டபுள்யூ.’ வங்கியில் இருந்து கடன் உதவி பெற்று மின்சார பஸ் போக்குவரத்தும், பி.எஸ்.-6 ரக பஸ்களுக்கும் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. மீண்டும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி அமைந்ததும் இந்த திட்டம் செயல்படுத்தப்படும்.

10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்கள், பள்ளிச் சீருடை அணிந்து கொண்டு, கடந்த ஆண்டு வழங்கப்பட்ட பழைய பஸ் பயணச் சலுகை அட்டையை பயன்படுத்தி பஸ்களில் இலவசமாக பயணிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து