பொங்கல் கொண்டாட்டம் முடிந்து ஒரே நாளில் சென்னை திரும்பிய பொதுமக்களால் சுங்கச்சாவடிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
பொங்கல் பண்டிகையையொட்டி சென்னையில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக தமிழக அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலம் கோயம்பேடு புறநகர் பஸ் நிலையம், தாம்பரம் அறிஞர் அண்ணா பஸ் நிலையம் போன்ற இடங்களில் இருந்து தமிழகத்திலுள்ள பல்வேறு மாவட்டங்களுக்கு சிறப்பு பஸ்களை இயக்கியது. வண்டலூர் பூங்கா அருகே கிளாம்பாக்கம் ஜி.எஸ்.டி. சாலை ஓரம் உள்ள சி.எம்.டி.ஏ.வுக்கு சொந்தமான இடத்தில் புதிதாக புறநகர் பஸ் நிலையம் கட்டும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. அந்த இடத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி தற்காலிக பஸ் நிலையம் அமைக்கப்பட்டு தென்மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து பஸ்களும் இங்கு நின்று செல்லும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு. பொதுமக்கள் அங்கு வந்து பஸ் ஏறி தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றனர். மேலும் ஏராளமானோர் கார் மற்றும் மோட்டார் சைக்கிளில் மூலம் சொந்த ஊர் சென்றனர்.
இந்த நிலையில் தென் மாவட்டத்திற்கு சென்றவர்கள் பொங்கல் தொடர் விடுமுறைக்கு பின்னர் சென்னைக்கு திரும்பி தொடங்கினர். இதனால் காலை முதல் அதிக அளவில் வாகனங்கள் சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தன. இதனால் அங்கு கடுமையான போக்குவரத்துக்கு நெரிசல் ஏற்பட்டது. ஒரு கிலோமீட்டர் தூரத்துக்கு மேல் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. குறிப்பாக திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் விக்கிரவாண்டி, ஆத்தூர் சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. அதேபோல வாணியம்பாடி அருகே சுங்கச்சாவடியை கடக்க காத்திருக்கும் ஏராளமான வாகனங்களின் காரணமாக அங்கு நீண்ட வரிசை அணிவகுத்து நின்றது.
இதே போல் செங்கல்பட்டு – பரனூர் சுங்கச்சாவடியிலும் மிகக் கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டது. இதனால் மகேந்திரா சிட்டி முதல் சிங்கப்பெருமாள் கோவில் வரை சர்வீஸ் ரோட்டிலும் வாகனங்கள் வந்தன. இதனால் அந்த பகுதி மக்கள் நடந்து செல்லவே முடியாத அளவுக்கு சிரமத்துக்கு ஆளானார்கள். இரவு 7 மணியளவில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் ஒரே நேரத்தில் அணிவகுத்ததால், இந்த நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனங்கள் சுங்கக் கட்டணம் செலுத்துவதற்கு பாஸ்ட் டேக் முறை அறிமுகம் செய்யப்பட்ட பிறகும் இப்படியான நெரிசல் ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டனர். இதையடுத்து, கூடுதல் பாதைகள் திறக்கப்பட்டு வாகனங்கள் விரைவாக அனுப்பி வைக்கப்பட்டன.