முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

4-வது டெஸ்ட் போட்டி: இந்தியாவுக்கு 328 ரன் இலக்கு: சிராஜ் 5 விக்கெட், தாக்கூர் 4 விக்கெட்: 294 ரன்களில் ஆல் அவுட்டானது ஆஸ்திரேலியா

திங்கட்கிழமை, 18 ஜனவரி 2021      விளையாட்டு
Image Unavailable

Source: provided

பிரிஸ்பேன் : இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான 4வது டெஸ்ட் போட்டியின் 4-வது நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 294 ரன்கள் எடுத்தது. இதைத் தொடர்ந்து இந்தியாவுக்கு 328 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி பிரிஸ்பேன் நகரில் நடந்து வருகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்சில் 369 ரன்னில் ஆல் அவுட்டானது.

தமிழக வீரர்கள் நடராஜன், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், தாகூர் 2 விக்கெட்டையும், சிராஜ் ஒரு விக்கெட்டையும் எடுத்தனர். இதைத் தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 2-வது நாள் முடிவில் 2 விக்கெட்டுக்கு 60 ரன்கள் எடுத்திருந்தது. புஜாரா (8 ரன்), கேப்டன் அஜிங்யா ரஹானே (2 ரன்) களத்தில் இருந்தனர்.

இந்த நிலையில் 3-வது நாள் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 336 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலியா அணியை விட 33 ரன்கள் பின்தங்கி இருந்தது. அதைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா அணி தனது 2-வது இன்னிங்சை தொடங்கியது. 3வது நாள் ஆட்டத்தின் முடிவில் ஆஸ்திரேலியா அணி 6 ஓவரில் 21 ரன் அடித்தது. வார்னர் 22 பந்துகளில் 22 ரன்களும், மார்கஸ் 14 பந்துகளில் 1 ரன் அடித்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

இந்நிலையில் நேற்று 4வது நாள் ஆட்டம் தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் வார்னரும், மார்க்கஸ் ஹாரிஸும் சிறப்பான தொடக்கத்தை வழங்கினர். 89 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்து நிதானமாக விளையாடினர். 24.6 ஓவரில் 82 பந்துகளில் 38 ரன் அடித்த மார்க்கஸ் தாகூர் பந்துவீச்சில் அவுட்டாகி வெளியேறினார்.

அவரைத் தொடர்ந்து 25.6 ஓவரில் 75 பந்துகளில் 48 ரன் அடித்த வார்னர் வாஷிங்டன் சுந்தர் பந்துவீச்சில் அவுட்டாகி வெளியேறினார். இதைத் தொடர்ந்து களம் இறங்கிய மார்னஸ், ஸ்டீவ் சுமித் ஆகியோர் இணைந்து ரன் எடுக்கும் முயற்சியில் இறங்கினர். ஆனால் அந்த கூட்டணியும் நீண்ட நேரம் நீடிக்கவில்லை. 303வது ஓவரில் 22 பந்துகளில் 25 ரன் அடித்த மார்னஸ் சிராஜ் பந்து வீச்சில் அவுட்டாகி வெளியேறினார்.

இதன் பின்னர் களம் இறங்கிய மேத்யூ வேட் அதே ஓவரில் 3 பந்துகளை எதிர்கொண்டு ரன் எதுவும் எடுக்காமல் சிராஜ் பந்து வீச்சில் அவுட்டாகி வெளியேறினார். அதன்பின் களம் இறங்கிய கேம்ரூன் ஸ்டீவ் சுமித்துடன் இணைந்து ரன் அடிக்க முயன்றார். 54.2 ஓவரில் 74 பந்துகளில் 55 ரன் எடுத்த ஸ்டீவ் சுமித் சிராஜ் பந்து வீச்சில் அவுட்டாகி வெளியேறினார். இதைத் தொடர்ந்து கேப்டன் டிம் பெயின் களம் இறங்கினார்.

60.5வது ஓவரில் 90 பந்துகளில் 37 ரன்கள் அடித்த கேம்ரூன் தாக்கூர் பந்துவீச்சிலும் அவரைத் தொடர்ந்து 64.6வது ஓவரில் 37 பந்துகளில் 27 ரன்கள் அடித்த கேப்டன் டிம்பெயின் அவட்டாகி வெளியேற பேட் கம்மின்ஸ், ஸ்டார்க் ஆகியோர் இணைந்து ரன் எடுக்க முயன்றனர். 66.1 ஓவரில் ஆஸ்திரேலியா அணி 7 விக்கெட் இழப்புகள் 243 ரன்கள் அடித்திருந்தது. சிராஜ், தாக்கூர் தலா 3 விக்கெட்டுகளும், வாஷிங்டன் சுந்தர் 1 விக்கெட்டும் வீழ்த்தினர். பேட் கம்மின்ஸ் 16 பந்துகளில் 2 ரன்களும், ஸ்டார்க் ஒரு பந்தில் ஒரு ரன்னும் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இந்தநிலையில் மழை பெய்யத் தொடங்கியதால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. சிறிது நேரத்திற்கு பின்னர் ஆட்டம் தொடங்கியது. 67.3வது ஓவரில் 4 பந்துகளில் 1 ரன் அடித்த ஸ்டார்க் சிராஜ் பந்து வீச்சில் அவுட்டாகி வெளியேறினார். அதைத் தொடர்ந்து களம் இறங்கிய நாதன் லயன் 10 பந்துகளில் 13 ரன் அடித்த நிலையில் தாக்கூர் பந்து வீச்சிலும், ஹேசில்வுட் 11 பந்துகளில் 9 ரன்களில் அடித்த நிலையில் சிராஜ் பந்து வீச்சில் அவுட்டாகி வெளியேறினார்.

இதைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா அணி 75.5வது ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 294 ரன்கள் அடித்தது. பேட் கம்மின்ஸ் 21 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய வீரர் சிராஜ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். அவரைத் தொடர்ந்து தாக்கூர் 4 விக்கெட்டுகளையும், வாஷிங்டன் சுந்தர் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்சில் 369 ரன்களும், 2-வது இன்னிங்சில் 294 ரன்களும் அடித்துள்ளது. இந்திய அணி முதல் இன்னிங்சில் 336 ரன்கள் அடித்து 33 ரன் பின் தங்கிய நிலையில் இருந்தது. தற்போது இந்திய அணிக்கு 328 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவும், 2-வது டெஸ்டில் இந்தியாவும் வெற்றி பெற்றது.

மூன்றாவது டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்தது. இதனால் 1–1 என்ற இரு அணிகளும் சமநிலையில் உள்ளதால் 2வது இன்னிங்சில் இந்தியா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி பெறுமா? அல்லது டிரா செய்ய முயற்சி செய்யுமா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து உள்ளனர்.

இதைத் தொடர்ந்து இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் ஆகியோர் களம் இறங்கினர். 1.5 ஓவரின் போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் மீண்டும் நிறுத்தப்பட்டது. ரோகித் சர்மா 10 பந்துகளில் 5 ரன்களும், சுப்மன் கில் ரன் எதுவும் எடுக்காமல் களத்தில் இருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து