முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.தி.மு.க.வில் சசிகலாவை சேர்க்க வாய்ப்பே இல்லை: டெல்லியில் முதல்வர் எடப்பாடி பேட்டி

செவ்வாய்க்கிழமை, 19 ஜனவரி 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : அ.தி.மு.க.வில் சசிகலாவை சேர்க்க வாய்ப்பே இல்லை என்றும் அவர் கட்சியிலேயே இல்லை என்றும் முதல்வர் எடப்பாடி டெல்லியில் நிருபர்களிடம் தெரிவித்தார். 

டெல்லியில் நேற்று பிரதமர் மோடியை சந்தித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தார். அதன் பின்னர் செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார். அதன் விபரம் வருமாறு:-

கேள்வி:- அரசியல் அம்சங்கள் குறித்து ஆலோசனை நடத்தினீர்களா?

பதில்:- திரும்பத் திரும்பச் சொல்கிறேன். அரசியல் ரீதியாக எந்த விஷயத்தையும் பேசவில்லை. பேசுவதற்கு எந்த நேரமும் இல்லை. இன்னும் தேர்தலுக்குக் காலம் உள்ளது. 

கேள்வி:- தமிழகத்தில் தாமரை மலரும் என்று பா.ஜ.க.வினர் சொல்கிறார்களே? உங்கள் கருத்து என்ன?

பதில்:- ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு கொள்கை உண்டு. அவர்கள் அது குறித்துத்தான் பேசுவார்கள். அதில் தவறில்லை. அவரவர்கள் அவர்களது கட்சி குறித்துத்தான் பேசுவார்கள். சாதாரணக் கட்சியாக இருந்தாலும் அப்படித்தான் பேசுவார்கள். அகில இந்தியக் கட்சிகள் அப்படித்தான் பேசும். 

கேள்வி:- திராவிடக் கட்சிகளை ஒழிக்கவேண்டும் என்று பேசுகிறார்களே?

பதில்:-  கூட்டணி வேறு, கொள்கை வேறு. ஒவ்வொரு கட்சியும் தங்கள் கட்சி ஆட்சிக்கு வரவேண்டும் என்று நினைப்பதில் தவறில்லை. அது அவர்களது கட்சிக் கொள்கை.

கேள்வி:- கூட்டணியில் யார் தலைமை என்பது குறித்து முடிவெடுக்கப்பட்டுள்ளதா?

பதில்:- அ.தி.மு.க. பொதுக்குழுவில் முடிவு எடுக்கப்பட்டு விட்டது. நாடாளுமன்றத் தேர்தலில் இருந்து அ.தி.மு.க. தலைமையில்தான் கூட்டணி உள்ளது. 

கேள்வி:- சசிகலா விடுதலைக்குப் பின் அ.தி.மு.க.வில் இணைய வாய்ப்புள்ளதா?

பதில்:- ஒன்றும் வாய்ப்பு இல்லை. அவர் அ.தி.மு.க.விலேயே இல்லை. 

கேள்வி:- பா.ஜ.க. அவரை அ.தி.மு.க.வில் இணைக்க வேண்டும் என்று பேசப்பட்டதா?

பதில்:- யார் சொன்னது? அப்படி வாய்ப்பே இல்லை. அப்படி எல்லாம் பேச்சுவார்த்தையே கிடையாது. நாங்கள் தமிழக வளர்ச்சித் திட்டத்துக்காகவும், நிதி ஒதுக்கீட்டுக்காகவும்தான் பிரதமரை சந்தித்தோம். 100 சதவீதம் இதைத்தான் பேசினோம்.

கேள்வி:- சசிகலாவின் சொல்லை அ.தி.மு.க.வில் மீற மாட்டார்கள் என்று பேச்சு அடிபடுகிறதே?

பதில்:- 100 சதவீதம் கிடையாது. அ.தி.மு.க. தெளிவாக முடிவு செய்து நடக்கிறது. கட்சியில் அங்கிருந்து பலரும் வந்து சேர்ந்து விட்டார்கள். 

கேள்வி:- டிடிவி தினகரன் வந்தால் சேர்த்துக்கொள்வீர்களா?

பதில்:- அவரை பல ஆண்டுகாலம் ஜெயலலிதாவே நீக்கித்தானே வைத்திருந்தார். அவர் மறைவுக்குப் பின்தானே இவர் வெளியில் வந்தார். பதவி கொடுத்தார்கள். ஜெயலலிதா இருந்தபோது அவர் கட்சியிலேயே கிடையாது.  இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதிலளித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து