முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு: முகக்கவசம் அணிந்து வந்த மாணவ, மாணவிகள் உற்சாகம்

செவ்வாய்க்கிழமை, 19 ஜனவரி 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் பள்ளிகள் மூடப்பட்டன.  மாணவர்கள் ஆன்லைன் மற்றும் கல்வி தொலைக்காட்சி வழியாக வீடுகளில் இருந்து படித்து வந்தனர். இந்த நிலையில் 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகளை திறக்க அரசு முடிவு செய்தது. கொரோனா தொற்று குறைந்து வந்தாலும் பெற்றோர்களின் சம்மதத்துடன் பள்ளிகளை திறக்க கருத்து கேட்கப்பட்டது.  அதன்படி தமிழகம் முழுவதும் பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்பட்டதில் பெரும்பாலானோர் பள்ளிகளை திறக்க விருப்பம் தெரிவித்தனர். அதனை தொடர்ந்து பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டன.

கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வகுப்புகளை நடத்த அரசு உத்தரவிட்டு இருந்தது.  அதன்படி தமிழகம் முழுவதும் உள்ள 13 ஆயிரம் பள்ளிகளில் 10, 12-ம் வகுப்பு படிக்கும் 19 லட்சம் மாணவ- மாணவிகளை பாதுகாப்பாக கையாள தேவையான நடவடிக்கைகளை பள்ளிக் கல்வித்துறை எடுத்தது.  பள்ளி வளாகம், வகுப்பறை உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு தூய்மைப்படுத்தப்பட்டன. அனைத்து பாதுகாப்பு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை கல்வித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.  

இதனை தொடர்ந்து நேற்று தமிழகம் முழுவதும் பள்ளிகள் திறக்கப்பட்டன. மாணவ- மாணவிகள் உற்சாகத்துடன் வகுப்புக்கு வந்தனர். 10 மாதத்திற்கு பிறகு ஒருவரை ஒருவர் சந்திக்கக்கூடிய நிலை ஏற்பட்டு இருந்ததால் மகிழ்ச்சியில் கட்டித்தழுவி, கைகளை குலுக்க நேரிடும் என்பதால் அதனை தவிர்க்கும் வகையில் பல்வேறு கட்டுப்பாடுகள் மாணவர்களுக்கு விதிக்கப்பட்டு இருந்தன. 

மாணவ- மாணவிகள் முகக்கவசம் அணிந்து வந்தனர். அவர்களுக்கு நுழைவு வாயிலில் உடல் வெப்ப பரிசோதனை செய்யப்பட்டது.  அக்கருவியை கொண்டு உடலின் வெப்பத்தை பரிசோதனை செய்த பிறகே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். அதன் பின்னர் கிருமிநாசினி பயன்படுத்தி கைகளை கழுவ அறிவுறுத்தப்பட்டனர்.  அதனை தொடர்ந்து வகுப்புகளுக்கு அனுப்பப்பட்டனர்.

வகுப்பறை 25 மாணவர்கள் அமரும் வகையில் 6 அடி இடைவெளியில் இருக்கைகள் அமைக்கப்பட்டு இருந்தன. இருக்கைக்கு நம்பர் குறியீடு கொடுக்கப்பட்டு அதில் அமரும்படி அறிவுறுத்தப்பட்டனர்.

பள்ளிக்குள் வரும் மாணவ-மாணவிகளை ஆசிரியர்கள் வகுப்புகளுக்கு தகுந்த இடைவெளியுடன் அழைத்து சென்று அமர வைத்தனர். இரண்டு வகுப்பறைக்கு ஒரு சானிடைசர் வைக்கப்பட்டு இருந்தது.  வகுப்பறைக்கு செல்லும் பகுதியிலும் சானிடைசர் வைக்கப்பட்டு இருந்தது. மாணவர்கள் அடிக்கடி சானிடைசர் அல்லது சோப்பை பயன்படுத்தும் வகையில் அறிவுறுத்தப்பட்டனர். 

பள்ளி வளாகத்தில் மாணவர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என அறிவிப்பு பலகையில் எழுதி வைக்கப்பட்டு இருந்தது. அது தவிர வகுப்பு தொடங்குவதற்கு முன்பு வரை விழிப்புணர்வு அறிவுரைகளை அறிவித்தனர்.  முகக்கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை கட்டாயம் அனைவரும் பின்பற்ற வேண்டும். தொட்டு பேசுதல், கை குலுக்குதல் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். வீட்டில் இருந்துகொண்டு வரும் குடிநீர், மதிய உணவு ஆகியவற்றை பகிர்ந்து சாப்பிடக்கூடாது. 

வகுப்புகளை விட்டு வெளியே செல்லாமல் இருப்பதை ஆசிரியர்கள் கண்காணித்தனர்.  மாணவர்களை போல ஆசிரியர்களும், ஊழியர்களும் முகக்கவசம் அணிந்து இருந்தனர்.  கை குலுக்கவும், தொட்டு பேசவும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டு இருந்ததால், மாணவ- மாணவிகள் இடைவெளியுடன் ஒருவரையொருவர் நலம் விசாரித்து கொண்டனர். புன்னகையை மட்டும் பகிர்ந்து கொண்டனர். 

பள்ளிக்கு வரும் மாணவ-மாணவிகளை வகுப்புகளை விட்டு வெளியேறும் வரை ஆசிரியர்கள் தீவிரமாக கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டனர். வகுப்பறைக்கு வெளியே நின்று பேசுதல், அரட்டை அடித்தல் போன்ற எவ்வித தேவையற்ற நிகழ்வுகளையும் வளாகத்தில் நடைபெறாமல் ஆசிரியர்கள் கண்காணித்தனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து