புதுடெல்லி : பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 29-ம் தேதி தொடங்க இருக்கும் நிலையில், 30-ம் தேதி பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பாராளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர் டெல்லியில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்த நிதியாண்டு ரத்து செய்யப்பட்டது. குளிர்காலக் கூட்டத் தொடரை பட்ஜெட் கூட்டத்தொடரோடு சேர்த்து நடத்திக் கொள்ளலாம் என்று மத்திய அரசு எம்.பி.க்களிடம் கடிதம் மூலம் தெரிவித்தது.
கொரோனா தொற்றுக்கு மத்தியில் கடந்த மழைக்காலக் கூட்டத்தொடரை மத்திய அரசு நடத்தி எம்.பி.க்கள், பாராளுமன்ற ஊழியர்கள், பாதுகாவலர்கள் எனப் பலரும் பாதிக்கப்பட்டனர். இதனால், முன்னதாகவே கூட்டத்தொடர் நிறைவடைந்தது. அதே போன்ற சூழல் இந்த முறையும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதால், கூட்டத்தொடர் நடத்துவது குறித்து மத்திய அரசு மிகவும் கவனத்துடன் ஆலோசித்து குளிர்காலக் கூட்டத் தொடரை ரத்து செய்தது.
இந்நிலையில் பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரை வரும் 29-ம் தேதி கூட்டி, வரும் ஏப்ரல் 8-ம் தேதி வரை நடத்தலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. பிப்ரவரி 1-ம் தேதி பொது பட்ஜெட்டைத் தாக்கல் செய்யப்பட உள்ளது.
முதல்கட்டக் கூட்டத்தொடர் வரும் 29-ம் தேதி தொடங்கி பிப்ரவரி 15-ம் தேதி வரையிலும், 2-வது கட்டக் கூட்டத்தொடர் மார்ச் 8-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 8-ம் தேதி வரை நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 29-ம் தேதி பாராளுமன்றக் கூட்டுக்குழுக் கூட்டத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையாற்றி, கூட்டத்தொடரைத் தொடங்கி வைக்க உள்ளார்.
மாநிலங்களவை காலையில் தொடங்கி நண்பகலில்முடிவு பெறும். பிற்பகலில் மக்களவை தொடங்கி இரவுவரை நடத்தவும் மத்திய அ ரசு முடிவு செய்துள்ளது. இந்நிலையில் வரும் 30-ம் தேதி பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது.
இதுகுறித்து மத்திய பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி நேற்று நிருபர்களிடம் கூறுகையில், வரும் 30-ம் தேதி பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்துக் கட்சிகளின் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த கூட்டம் முழுவதும் காணொலி மூலமே நடத்தப்படும். எதிர்க்கட்சிகள் ஆலோசனைகள், கூட்டத்தொடரை சமூகமாக நடத்துவது குறித்து இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் எனத் தெரிவித்தார்.