கனவு காணத்தான் ஸ்டாலினால் முடியும்: 27-ம் தேதிக்கு பிறகும் எனது ஆட்சி நீடிக்கும்: மு.க.ஸ்டாலினுக்கு முதல்வர் எடப்பாடி சூடான பதில்

புதன்கிழமை, 20 ஜனவரி 2021      தமிழகம்
Edappadi 2020 11 25

Source: provided

காஞ்சிபுரம் : ஜனவரி 27-ம் தேதிக்குப் பின்னரும் தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சியே இருக்கும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மு.க.ஸ்டாலினால் கனவு காணத்தான் முடியும் என்றும் அவர் சூடாக பதிலளித்தார்.

சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு மாவட்டந்தோறும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் நேற்று புதன்கிழமை மற்றும் நாளை வியாழக்கிழமை ஆகிய இரண்டு நாள்கள் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். இந்த நிலையில் நேற்று காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் மற்றும் வாலாஜாபாத்தில் பிரச்சாரம் மேற்கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஸ்ரீபெரும்புதூர் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசியதாவது:- 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு அ.தி.மு.க.வை உடைக்க வேண்டும் என ஸ்டாலின் எவ்வளவோ முயற்சி செய்கிறார். ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என எத்தனையோ சதி திட்டங்களைத் தீட்டி முயற்சித்தார். ஆனால், மக்களின் ஆதரவோடும் தொண்டர்களின் ஆதரவோடும் அனைத்தும் சதித் திட்டங்களும் முறியடிக்கப்பட்டது. தற்போது கூட வருகின்ற 27-ம் தேதிக்குப் பிறகு எடப்பாடி பழனிசாமி முதல்வராக  இருப்பாரா என்று கூறி வரும் ஸ்டாலின் ஏற்கனவே இந்த ஆட்சி ஒரு மாதத்தில் கவிழும், ஆறு மாதத்தில் கவிழும், ஒரு வருடத்தில் கவிழும் எனக் கூறி வந்தார். ஆனால், நான்கு ஆண்டுகளாக சிறப்பான ஆட்சி நடைபெற்று வருகிறது. வருகின்ற  சட்டப்பேரவை பொதுத் தேர்தலிலும் அ.தி.மு.க. தான் வெற்றி பெறும். 

தி.மு.க. தலைவர் ஸ்டாலின் முதல்வர் கனவில் உள்ளார். அவர் காணுகின்ற கனவு ஒருபோதும் நிறைவேறாது. மீண்டும் அ.தி.மு.க. ஆட்சிதான் தமிழகத்தில் மலரும். இந்த தேர்தல் மட்டுமல்லாது வருகிற தேர்தல்களிலும் அ.தி.மு.க. தான் தொடர்ந்து ஆட்சி அமைக்கும். நான் எப்பொழுதும் விவசாயி விவசாயி என்று சொல்லுகிறேன் என ஸ்டாலின் சொல்லி வருகிறார். விவசாயி, விவசாயி என்று தான் சொல்ல முடியும். வியாபாரி, தான் வியாபாரி என்று தான் சொல்ல முடியும், அதேபோல விவசாயிதான் விவசாயி என்று தான் சொல்ல முடியும். 

மக்களால் தேர்தெடுகக்கப்பட்ட முதல்வர் அல்ல பழனிசாமி என்கிறார். மக்கள் முதல்வரை நேரடியாக தேர்தெடுக்க முடியாது என்பதை ஸ்டாலின் தெரிந்து கொள்ள வேண்டும். தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் மின்தடை தான் ஏற்படும். கடந்த தி.மு.க. ஆட்சியில் பல மணி நேரங்கள் இருந்த மின்தடை அ.தி.மு.க. அரசு பொறுப்பேற்றவுடன் தற்போது தமிழகத்தில் தேவைக்கு அதிகமாகவே மின்சாம் உற்பத்தி செய்யப்படுகிறது. குடிமராமத்து திட்டப் பணிகளால் நீர்நிலைகள் தூர்வாரப்பட்டு ஒரு சொட்டு நீர் கூட வீணாகாமல் சேமித்து வைத்துள்ள அரசு அ.தி.மு.க. அரசு. மாநில அரசுகள் எப்படி செயல்பட வேண்டும் என்பதற்கு இந்தியாவிற்கு முன்னுதாரணமாக தமிழகம் திகழ்ந்து வருகிறது. இதனால் பல துறைகளில் தமிழக அரசுக்கு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.  

உயர்கல்வி படிப்பவர்களின் எண்ணிக்கையில் இந்தியாவிலேயே தமிழகம் முதலிடம் வகிக்கிறது. தமிழகத்தில் உயர்கல்வி படிப்பவர்களின் எண்ணிக்கை 49 சதவிகிதம். கொரோனா வைரஸ் தொற்றை மிகச்சரியாக கையாண்டு வருகிறது தமிழக அரசு. இதனால் தான் மாநில முதல்வர்களின் ஆலோசனை கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகம் இந்தியாவிற்கு முன்னோடியாக விளங்குகிறது என்று தெரிவித்தார். ஆகவே தமிழகத்தில் தொடர்ந்து நல்லாட்சி அமைய இரட்டை இலைக்கு வாக்களிக்க வேண்டும். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து