துண்டு சீட்டு இல்லாமல் விவாதத்திற்கு வர தயாரா? - ஸ்டாலினுக்கு முதல்வர் எடப்பாடி சவால்

புதன்கிழமை, 20 ஜனவரி 2021      தமிழகம்
Edappadi 2020 11 18

Source: provided

ஸ்ரீபெரும்புதூர் : துண்டுசீட்டு இல்லாமல் விவாதத்திற்கு வர தயாரா என்று ஸ்டாலினுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி சவால் விடுத்துள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது, 

ஏழை, எளிய மக்களின் எண்ணங்களை அறிந்து அவர்களுக்கான திட்டங்களை நிறைவேற்றுகின்ற ஒரே அரசு அம்மாவுடைய அரசு. வரும் 27-ம் தேதி நாம் அம்மாவின் நினைவிடத்தை திறக்க இருக்கின்றோம். அம்மா மீது ஆணையிட்டு சொல்கின்றோம், வருகின்ற சட்டமன்ற பொதுத் தேர்தலில் அ.தி.மு.க.தான் வெற்றி பெறும். ஸ்டாலினால் கனவை மட்டுமே காண முடியும்.  இதே போலத் தான் நான் முதல்வராக பதவியேற்றப் போதும் கனவு கண்டார்.

இந்த ஆட்சி 10 நாட்களில், ஒரு மாதத்தில் கவிழ்ந்து விடும் என்று. ஆனால் தற்போது நான்கு ஆண்டுகள் வெற்றிகரமாக செயல்பட்டு கொண்டிருக்கிறது. அதேபோல் தான் இப்போதும் நீங்கள் காணுகின்ற கனவு, எண்ணம் ஒரு நாளும் நிறைவேறாது. மீண்டும் அம்மாவுடைய ஆட்சி தான் தமிழகத்திலே மலரும். மக்களின் ஆதரவோடு தொடர்ந்து அம்மாவுடைய அரசு ஆட்சி அமைக்கும். 

ஸ்டாலின் போகும் இடமெல்லாம் வேண்டுமென்றே திட்டமிட்டு எங்கள் ஆட்சியின் மீது பொய் பிரச்சாரம் செய்து வருகிறார். ஸ்டாலின் ஒரு திண்ணையில் பெட்ஷீட் போட்டு உட்கார்ந்து கொண்டு, மக்களிடம் கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறார். இதையெல்லாம் நீங்கள் ஆட்சியில் இருக்கும் போது ஏன் செய்யவில்லை. நீங்கள் துணை முதல்வராக இருந்தீர்கள், உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தீர்கள் அப்போது ஏன் மக்களை சந்தித்து கேள்வி கேட்கவில்லை.

2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு ஸ்டாலின் திட்டில் பெட்ஷீட் போட்டு உட்கார்ந்து கொண்டு மக்களிடம் மனுக்களை பெற்றாரே, அந்த கோரிக்கைகள் எல்லாம் என்னவாயிற்று என்பது தான் என்னுடைய கேள்வி. அப்பொழுது மக்களை ஏமாற்றி பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றீர்கள்.  இப்போதும் மக்களை ஏமாற்ற பார்க்கிறீர்கள். பதவியில் வந்துவிட்டால், குடும்பம் தான் கண்ணுக்கு தெரியும். மக்கள் கண்ணுக்கு தெரிய மாட்டார்கள். தன் வீட்டு மக்கள் தான் கண்ணுக்கு தெரிவார்கள். 

ஆகவே அ.தி.மு.க. அரசு தான் நாட்டு மக்களுக்கு என்ன தேவை என்பதை செயல்படுத்தும் அரசு. எடப்பாடி பழனிசாமி நேரடியாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் இல்லை என்று சொல்கிறார். உண்மை தான். நான் இல்லை என்று சொன்னால் தானே மறுப்பு தெரிவிக்க வேண்டும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள்தான் முதலமைச்சரை தேர்ந்தெடுக்க முடியும்.

பெரும்பான்மையான எம்.எல்.ஏ.க்கள் எந்த கட்சிக்கு கிடைக்கிறதோ அந்த கட்சி தான் சட்டமன்றக் கட்சி தலைவரை தேர்ந்தெடுத்து முதலமைச்சராக முடியும். நேரடியாக யாரும் மக்கள் ஒட்டு போட்டு முதலமைச்சர் ஆக முடியாது என்பதை ஸ்டாலினுக்கு தெரிவித்துக் கொள்கிறேன். அதுதான் நம்முடைய சட்டமுறை.

பேரறிஞர் அண்ணா பிறந்த மாவட்டம் இந்த காஞ்சிபுரம் மாவட்டம். பேரறிஞர் அண்ணா  தனது உழைப்பால் முதலமைச்சராகி துரதிஷ்டவசமாக மறைந்து விட்டார். அப்பொழுது கருணாநிதி சூழ்ச்சி செய்து முதலமைச்சராக வந்தார். அவர் நேரடியாக முதலமைச்சராக ஆகவில்லை. மக்கள் பேரறிஞர் அண்ணாவுக்குத்தான்  ஒட்டு போட்டார்கள்.

தமிழகத்தை ஆளக்கூடிய தகுதி பேரறிஞர் அண்ணாவுக்கு  இருக்கிறது என்பதால் தான் மக்கள் அவர் முதலமைச்சராக வேண்டும் என்று வாக்களித்தார்கள். கருணாநிதிக்கு அல்ல. ஸ்டாலினின் தந்தை எப்படி முதலமைச்சர் ஆனாரே அதேபோல் தான் எடப்பாடி பழனிசாமியும் முதலமைச்சர் ஆனார். 

நான் ஊர்ந்து ஊர்ந்து வந்து முதலமைச்சர் ஆனேன் என்று ஸ்டாலின் சொல்கிறார். அவருடைய அப்பா எட்டிக்குதித்து வந்தா முதலமைச்சர் ஆனார். கவிஞர் கண்ணாதாசன் தனது சுயசரிதையில் கருணாநிதி எப்படி ரயிலில் வந்தார் என்பதை தெளிவாக சொல்லியிருக்கிறார். நான் அப்படி வரவில்லை. நான் விவசாய குடும்பத்திலே பிறந்தவன். இன்றைக்கும் விவசாயம் செய்து கொண்டிருக்கின்றேன். ஆகவே, நான் வந்த வழி நேர்வழி. நீங்கள் வந்த வழி குறுக்கு வழி.

அதனால் தான் உங்களுக்கு குறுக்கு புத்தி இருக்கிறது.  கட்சியை உடைக்க வேண்டும் என்கிறார், ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்கிறார். நேரடியாக மக்களை சந்தித்து நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இன்னென்ன செய்வோம் என்று சொல்லி வாக்குகளை கேட்டால் பரவாயில்லை. நாங்கள் மக்களை சந்திக்கிறோம், எம்.ஜி.ஆர். அம்மா ஆகியோர் மக்களை சந்திக்கின்ற போது, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இதைஇதையெல்லாம் செய்வோம் என்று சொன்னார்கள். மக்கள் வாக்களித்தார்கள்,

முதலமைச்சர் ஆனார்கள், மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை  எல்லாம் நிறைவேற்றினார்கள். அதேபோல நாங்களும் மக்களை சந்திக்கின்றோம். நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வரும்போது இன்னும் பல திட்டங்களை நிறைவேற்றுவோம் என்று சொல்கின்றோம், தொடர்ந்து எங்களுக்கு நல்வாய்ப்பை தாருங்கள் என்று கேட்கின்றோம். பேரறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர். அம்மா ஆகிய தலைவர்கள் கண்ட கனவை நனவாக்குவதற்கு மீண்டும் அம்மாவுடைய ஆட்சி அமைய வாக்களிப்பீர் இரட்டை இலை சின்னத்திற்கே. 

ஸ்டாலின் சொல்கிறார், நீங்கள் எவ்வளவு குட்டிக்கரணம் போட்டாலும் ஜெயிக்க முடியாதாம். ஜெயிப்பதற்கும், குட்டிக்கரணம் போடுவதற்கும் என்ன சம்பந்தம். மக்களை சந்தித்து நாங்கள் என்னென்ன செய்தோம், என்னென்ன செய்யப் போகிறோம் என்று சொல்லி ஓட்டுக் கேட்கிறோம். ஆனால் குட்டிகரணம் போட்டால், குட்டிக்கரணம் யார் போடுவார்கள் என்று மக்களுக்கு தெரியும். ஆகவே இன்றைக்கு வேண்டுமென்றே திட்டமிட்டு அரசின் மீது குறைசொல்வது, கட்சி மீது குறை சொல்வது, அதைத்தான் ஸ்டாலின் வாடிக்கையாக கொண்டுள்ளார்.

ஸ்டாலின் இன்றைக்கு எந்த கூட்டத்திலும் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இதைச் செய்வோம் என்று கூறியதே கிடையாது. நாங்கள் கூறுகின்றோம், இன்றைக்கு அதிகமான தடுப்பணைகளை கட்டிக்கொடுத்திருக்கின்றோம்.  நீங்கள் ஆட்சிக்கு வந்தால் எப்பொழுது மின்சாரம் இருக்கும், எப்போது இருக்காது என்பதே தெரியாது, எப்போதும் மின்வெட்டுதான். தடையில்லா மின்சாரம் கொடுக்கக் கூடிய அரசு அம்மாவின் அரசு. உபரி மின்சாரத்தை உற்பத்தி செய்து மின்மிகை மாநிலமாகத் தமிழ்நாடு திகழ்ந்து கொண்டிருக்கிறது.

அதற்கும் விருதுகளைப் பெற்றுள்ளோம். உள்ளாட்சித் துறையில் நூற்றுக்கும் மேற்பட்ட தேசிய விருதுகளைப் பெற்று சாதனை பெற்ற அரசு அம்மாவின் அரசு.     ஸ்டாலினால் எந்தக் குறையும் சொல்லமுடியவில்லை. எனவே, வேண்டுமென்றே, திட்டமிட்டு இந்த ஆட்சி உடையும்,

இந்த ஆட்சி கவிழும் என்று சொல்வதையே வாடிக்கையாகக் கொண்டுள்ளார். நீங்கள் கனவு காணாதீர்கள். எப்போதும் உங்கள் கனவு மட்டும் நிஜமாகாது என்பதை மட்டும் இந்தத் தேர்தல் பிரச்சாரத்தின் வாயிலாக தெரிவித்துக் கொள்கிறேன். வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும். 

அ.தி.மு.க. ஆட்சியில் ஊழல் என்று சொல்கிறார். எந்த இடத்திற்கும் வா, ஆனால், துண்டு சீட்டு இல்லாமல் வரவேண்டும். யாராவது எழுதிக் கொடுத்ததை படிக்கக்கூடாது. எந்தத் துறையில் என்னென்ன என்று சொல், நான் பதில் சொல்கிறேன். அதற்குத் தயாராக இல்லை, ஆனால், வழக்கை வாபஸ் வாங்கு என்கிறாய். வழக்கிற்கும் இதற்கும் என்ன சம்பந்தம். நீ தானே புகார் கொடுத்தாய். அந்தப் புகாரில் என்னென்ன குற்றச்சாட்டு இருக்கிறதோ அதற்கு நான் பதில் சொல்கிறேன்.

ஆனால் வரமாட்டேன் என்கிறார். ஆளுநரிடம் பொய்யான அறிக்கை தயார் செய்து கொடுத்தார். ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு சாலை டெண்டர் ஒன்றை திருநெல்வேலியில் கேன்சல் செய்துவிட்டார்கள். அதுகூட தெரியாமல், அதில் 700 கோடி ரூபாய் ஊழல் என்று சொல்லி தி.மு.க.வின் தலைவர் பொய் அறிக்கை கொடுத்துள்ளார். படித்துப் பார்த்தால்தானே தெரியும், அவர் கோரப் பசியில் இருக்கிறார். சிறிது ஏமாந்தாலும் மக்களையே சாப்பிட்டு விடுவார். எப்போதும் முதலமைச்சர், முதலமைச்சர் என்று ஆட்சி அதிகாரத்திற்கு வர வேண்டுமென்று துடித்துக் கொண்டிருக்கிறார். முதலமைச்சர் பதவியை மக்கள் கொடுத்தால் ஏற்றுக் கொள்ளுங்கள், நான் வேண்டாமென்று சொல்லவில்லை.

நான் எப்போதும் முதலமைச்சர் என்று சொன்னதே கிடையாது. மக்களே முதலமைச்சர், மக்கள்தான் முதலமைச்சர். மக்கள் இடும் ஆணையை நிறைவேற்றுவதுதான் முதலமைச்சர் பணி. உங்களைப்போல குடும்பத்தில் உள்ளவர்கள்தான் ஆட்சிக்கு, அதிகாரத்திற்கு, கட்சிப் பதவிக்கு வரவேண்டும் என்பது அ.தி.மு.க.வுக்கு அல்ல. மக்களுக்கு உழைத்து, உழைப்பின் மூலமாக மக்களுக்கு நன்மை கிடைக்க வேண்டும்.

அந்த நன்மை மூலமாக மக்கள் பாராட்ட வேண்டும் என்பதைத்தான் அ.தி.மு.க. எதிர்பார்க்கிறது. வருகின்ற சட்டமன்றப் பொதுத்தேர்தலில் உங்கள் பொன்னான வாக்கினை இரட்டை இலை சின்னத்திற்கு அளித்து மாபெரும் வெற்றியை தேடித் தாருங்கள். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து