முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எஃகு கோட்டையான அ.தி.மு.க.வுடன் மோதினால் மண்டை தான் உடையும்: திருப்போரூர் பிரச்சாரத்தில் முதல்வர் எடப்பாடி எச்சரிக்கை

வியாழக்கிழமை, 21 ஜனவரி 2021      தமிழகம்
Image Unavailable

அ.தி.மு.க. எஃகு கோட்டை, மோதினால் மண்டை தான் உடையும் என்று ஸ்டாலினை முதல்வர் எடப்பாடி பழனிசாமி எச்சரித்தார்.

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் நேற்று நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

2011-ம் ஆண்டுக்கு முன்பு தி.மு.க. ஆட்சி, 2011 பிறகு அம்மாவுடைய ஆட்சி, இரண்டையும் ஒப்பிட்டு பாருங்கள். இந்த 10 ஆண்டு காலத்தில் அ.தி.மு.க. என்னென்ன நன்மைகள் செய்தது என்று சிந்தித்து பாருங்கள். மக்களுடைய நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று செங்கல்பட்டை புதிய மாவட்டமாக அறிவித்த அரசு எங்களுடைய அரசு.  தமிழ்நாடு முழுவதும் பொதுமக்கள் வைத்த கோரிக்கை, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் வைத்த கோரிக்கைகளை நிறைவேற்றுகின்ற விதமாக 6 மாவட்டங்களை பிரித்து புதிய மாவட்டங்களை தோற்றுவித்திருக்கிறேன். எது எது மக்களுக்கு தேவையோ, என்னென்ன காலக்கட்டத்தில் பொதுமக்களுக்கு என்னென்ன தேவையோ அதை சிந்தாமல், சிதறாமல் மக்களுக்கு செய்து கொண்டிருக்கின்ற ஒரே அரசாங்கம் அம்மாவுடைய அரசாங்கம்.

விவசாயிகளும், ஏழைமக்களும் நிறைந்த இந்த மாவட்டத்தில், தைப் பொங்கல் திருநாளை மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும் என்பதற்காக அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் 2500 ரூபாய் வழங்கிய அரசு அம்மாவுடைய அரசு. இதை தேர்தல் அறிக்கையில் வெளியிட்டோமோ. கிடையாது. கொரோனா பரவலால் வாழ்வாதாரத்தை இழந்த மக்கள் மகிழ்ச்சியோடு தைப் பொங்கலை கொண்டாட வேண்டும் என்பதற்காக 2500 ரூபாய் வழங்கியது. 

அதைக்கூட பொறுக்க முடியாமல் எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் நீதிமன்றம் வரை போகிறார். ஆனால் நீதிமன்றம் இது வாழ்வாதாரம் இழந்திருக்கின்ற சூழ்நிலையில் மக்களுக்கு அரசு அளிக்கின்ற நிதி என்று கூறி அதை நிராகரித்தது. ஏழை மக்களுக்கு கொடுக்கின்ற நிதியை கூட தடுத்து நிறுத்துகின்ற தலைவர் என்று சொன்னால் அது தி.மு.க. தலைவர் தான். அவர் எப்படி நாட்டு மக்களுக்கு நன்மை செய்வார். அரசின் இத்தகைய நல்ல திட்டத்தை வரவேற்க மனமில்லாவிட்டாலும், அதை எதிர்த்தார்கள். அதையும் முறியடித்த அரசு அம்மாவுடைய அரசு.

இது புகழ்பெற்ற அருள்மிகு கந்தசாமி திருக்கோயில் அமைந்திருக்கின்ற பகுதி. முருகப்பெருமான் எழுந்தருளியுள்ள பகுதி. அனைவரும் முருகப் பெருமானை தரிசனம் செய்ய வேண்டும் என்பதற்காக ஆண்டுதோறும் தைப்பூசத்தன்று அரசு விடுமுறை அளிக்கப்படும் என்று அறிவித்திருக்கின்றோம். ஆகவே, மக்களுடைய உணர்வை அறிந்த அரசு அம்மாவின் அரசு.

எடப்பாடி மற்றும் தேனியில் பெண்களை வைத்து மக்கள் கிராம சபை கூட்டம் என்ற ஒன்றை ஸ்டாலின் நடத்தி வருகிறார். எவ்வளவு திட்டமிட்டு செயல்படுகிறார் என்று பாருங்கள். அங்கே போய் அமர்ந்து கொண்டு, அங்கு இருக்கிற பெண்களுக்கு துணை முதல்வர் மீது குற்றச்சாட்டை சொல்ல சொல்கிறார்.  கொரோனா லாக்டவுன் காலக்கட்டத்தில் தமிழகத்திற்கு வர முடியாமல் டெல்லியில் சிக்கி தவித்த சுமார் 400 இஸ்லாமிய பெருமக்களை தன்னுடைய சொந்த செலவில் ரயிலிலே அழைத்து வந்து அவர்களை வரவேற்று அவர்களுக்கு தேவையான சிகிச்சை அளித்த தலைவர் ஓ.பி.எஸ். கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்ட காலக்கட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உணவுகளை வழங்கினார்.

அங்கே ஒரு பெண்மணி ஒரு தவறான கருத்தை சொல்லி, ஸ்டாலின் அதற்கு பதில் சொல்லி கொண்டிருக்கிறார். ஸ்டாலின் ஒரு நாகரிகமில்லாத அரசியல் கட்சி தலைவர். வேண்டுமென்றே துணை முதல்வர் மீது பொய்யான குற்றச்சாட்டை பரப்பி வருகிறார். எந்த அரசியல் கட்சித் தலைவரும், தவறான செய்தியை ஒரு பெண்ணிடத்திலே சொல்லி கொடுத்து, அதை பேச வைத்து, பிரச்சாரம் செய்து, அரசியல் நாடகம் ஆட மாட்டார்கள். இதன்மூலம் அரசியல் ஆதாயம் பார்க்க நினைக்கிறார் ஸ்டாலின். நேருக்கு நேர் அரசியலில் மோதிப் பார். அப்பாவி மக்களை வைத்து அவர்களை பேச வைத்து மோத வேண்டாம். அ.தி.மு.க. எஃகு கோட்டை, இதில் மோதினால் மண்டை தான் உடையும்.

அ.தி.மு.க.வினர் உழைக்க பிறந்தவர்கள். உழைப்பால் முன்னுக்கு வர வேண்டும் என்ற எண்ணம் உடையவர்கள். எம்.ஜி.ஆர், அம்மா ஆகியோர் உழைத்து வளர்த்த இயக்கம் அ.தி.மு.க. இயக்கம். எங்கள் இயக்கத்தின் தலைவர்கள் மீதோ, தொண்டர்கள் மீதோ வீண் பழி சுமத்தினால் நீங்கள் வெளியில் கூட நடமாட முடியாது என்பதை இந்த நேரத்திலே தெரிவித்து கொள்கிறேன்.

உன்னுடைய மகன் உதயநிதி கூட்டத்தில் பேசுகின்ற போது பெண்களை இழிப்படுத்தி பேசுகிறார். அதை நீ கண்டித்தாயா. உதயநிதி பேசிய பேச்சு பெண் குலத்தையே இழிவுப்படுத்துகின்ற பேச்சு. தந்தை எவ்வழியோ, அப்படித்தானே மகனும் இருப்பார். அவர்களுக்கு நாட்டு மக்களின் எண்ணம் குறித்து தெரியாது. அ.தி.மு.க. அமைச்சர்கள் மீது வீண் பழி சுமத்தி, ஆட்சிக்கு வர துடிக்கிறார்கள். அவர்களுக்கு சரியான அடியை இந்த தேர்தலில் மக்கள் கொடுக்க வேண்டும். பொய் பேசி ஆட்சிக்கு வர துடிப்பவர்களுக்கு இந்த தேர்தல் ஒரு பாடமாக அமைய வேண்டும்.

வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் நீங்கள் உங்களது பொன்னான வாக்குகளை இரட்டை இலை சின்னத்திற்கு அளித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்து அம்மாவின் ஆட்சி தொடர துணை நிற்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து