தந்தை சமாதிக்கு மலர் தூவி கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய முகமது சிராஜ்

வெள்ளிக்கிழமை, 22 ஜனவரி 2021      விளையாட்டு
Mohammad-Siraj 2021 01 22

Source: provided

மும்பை : ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்று வரலாறு படைத்த இந்திய கிரிக்கெட் வீரர்கள் தாயகம் திரும்பினர். 

ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் அறிமுக வீரராக அடியெடுத்து வைத்த வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் பிரிஸ்பேன் டெஸ்டின் 2-வது இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை சாய்த்து அமர்க்களப்படுத்தினார். அவர் ஆஸ்திரேலியாவில் இருந்த போது அவரது தந்தை முகமது கோஸ் உடல்நலக்குறைவால் மரணம் அடைந்தார்.

கொரோனா அச்சுறுத்தல் மற்றும் ஆஸ்திரேலியாவில் தனிமைப்படுத்தும் பாதுகாப்பு வளையத்தில் இணைந்திருந்ததால் அவரால் இந்தியாவுக்கு உடனடியாக திரும்ப முடியாமல் போனது. இதனால் தந்தையின் இறுதிச்சடங்கில் அவர் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடி தனது தந்தையின் கனவை நிறைவேற்றி விட்டதாக கூறி முகமது சிராஜ் நெகிழ்ந்தார். 

தெலுங்கானா ஷம்ஷாபத் விமான நிலையம் வந்திறங்கிய அவர் அங்கிருந்து நேராக தனது தந்தை நல்லடக்கம் செய்யப்பட்ட காயர்தாபாத் சுடுகாட்டுக்கு சென்று மலர் தூவி கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார். சிறிது நேரம் அங்கு உட்கார்ந்திருந்த அவர் பின்னர் வீடு திரும்பியதும் தாயாருக்கு ஆறுதல் கூறினார்.

அதைத் தொடர்ந்து நிருபர்களுக்கு பேட்டி அளித்த முகமது சிராஜ், ஆஸ்திரேலிய தொடரில் வீழ்த்திய ஒவ்வொரு விக்கெட்டையும் மறைந்த தனது தந்தைக்கு அர்ப்பணிப்பதாக உருக்கமுடன் கூறினார். 

சிட்னியில் நடந்த 3-வது டெஸ்டின் போது முகமது சிராஜை மைதானத்தில் இருந்த சில ஆஸ்திரேலிய ரசிகர்கள் குரங்குடன் ஒப்பிட்டு இனவெறியுடன் திட்டினர். இந்த சம்பவம் பற்றி சிராஜிடம் கேட்ட போது, ‘ஆஸ்திரேலியாவில் இனவெறி அவமானத்தை சந்தித்தேன். உடனே கேப்டன் மூலம் நடுவர்களிடம் முறையிட்டேன்.

நடுவர்கள் எங்களுக்கு போட்டியில் இருந்து பாதியில் வெளியேறும் வாய்ப்பை வழங்கினர். ஆனால் கேப்டன் ரஹானே, நாங்கள் போட்டியில்இருந்து விலக மாட்டோம். நாங்கள் தவறு செய்யவில்லை. அதனால் தொடர்ந்து விளையாடுவோம் என்று கூறினார். ரசிகர்களின் வசைமொழி என்னை மனதளவில் வலுப்படுத்தியது. அதனால் எனது ஆட்டத்தில் எந்த பாதிப்பும் ஏற்படாமல் பார்த்துக் கொண்டேன்’ என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து