முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பி.எச்.டி. முடித்திருந்தால்தான் உதவிப்பேராசிரியர் பணி: அரசாணையை திரும்ப பெற வைகோ வலியுறுத்தல்

சனிக்கிழமை, 23 ஜனவரி 2021      தமிழகம்
Image Unavailable

உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு பி.எச்.டி. முடித்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்று அரசாணை வெளியிட்டு இருப்பது அநீதியானது. சமூக நீதியைப் பறிக்கும் இந்த அரசாணையை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது தமிழ்நாட்டிலுள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் மாநில அரசு நடத்தும் 'செட் தேர்வு (State Eligibility Test -SET)' மற்றும் தேசிய தேர்வு முகமை நடத்தும் 'நெட் தேர்வு (National Eligibility Test - NET)' ஆகியவற்றில் தகுதி பெற்றவர்கள் மூலம் நிரப்பப்பட்டு வருகின்றன. 

பல்கலைக்கழக நிதி நல்கைக் குழுவின் வழிகாட்டுதலின்படி (யு.ஜி.சி.) அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் 'செட்' மற்றும் 'நெட்' தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளவர்களும், பி.எச்.டி. ஆய்வுப் படிப்பை முடித்தவர்களும் உதவிப் பேராசிரியர் பணிக்குத் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். 

உயர்கல்வித் துறை பல்கலைக்கழகங்கள் மூலமாக நடத்தி வந்த 'செட்' தகுதித் தேர்வை கடந்த இரண்டு ஆண்டுகளாக நடத்தவில்லை. இந்நிலையில் வரும் ஜூலை 1 முதல் பி.எச்.டி. ஆய்வுப் படிப்பை முடித்தவர்கள் மட்டுமே கல்லூரி மற்றும் பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர் பணி இடங்களுக்கு விண்ணப்பிக்கும் தகுதியைப் பெறுவார்கள் என்று தமிழக அரசின் உயர்கல்வித் துறை அரசாணை பிறப்பித்து இருக்கின்றது. 

பல்கலைக்கழக நிதி நல்கைக் குழு நிர்ணயித்துள்ள விதிகளின் கீழ் இந்த அரசாணை வெளியிடப்பட்டு இருப்பதாக உயர்கல்வித் துறை கூறி இருக்கின்றது. 

முதுகலை மற்றும் எம்.பில்., பட்டம் பெற்று, அதன்பின்னர் 'செட்', 'நெட்' தகுதித் தேர்வுகளில் தேர்ச்சி பெறும் கிராமப்புற மாணவர்கள் உதவிப் பேராசிரியர் பணி வாய்ப்பு பெறப் போராடி வரும் நிலையில், இனி பி.எச்.டி., ஆய்வுப் படிப்பை முடித்தால் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்று தகுதி நிர்ணயித்து இருப்பது வன்மையான கண்டனத்துக்கு உரியது. 

ஏழை கிராமப்புற மாணவர்கள்ம், பிற்படுத்தப்பட்ட, பட்டியல் இன மற்றும் பழங்குடி மாணவர்கள் முதுகலை, எம்.பில்., படித்துவிட்டு அதற்கு மேலும் பி.எச்.டி., ஆய்வு மேற்கொள்வது என்பது முயற்கொம்புதான். அதற்குப் பொருளாதாரச் சூழலும் இடம் தராது. 

எப்படியாவது கல்லூரிப் படிப்பை முடித்து, வேலைவாய்ப்புத் தேடி நகர வேண்டிய சூழலில் இருக்கும் கிராமப்புற ஏழை, எளிய மாணவர்கள் பி.எச்.டி., ஆய்வுப் படிப்பைத் தொடருவதற்கு கல்வி நிறுவனங்களில் ஊக்கத்தொகையோ, அல்லது மத்திய, மாநில அரசுகளின் உதவித் தொகையோ அனைவருக்கும் கிடைப்பது இல்லை. 

இந்நிலையில், பி.எச்.டி. முடித்தால்தான் உதவிப் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கவே முடியும் என்று தமிழக அரசு அரசாணை பிறப்பித்து இருப்பது அநீதியாகும். சமூக நீதியைப் பறிக்கும் இந்த அரசாணையை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்" என்று அதில் வைகோ தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து