முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனாவை கொல்லும் புதிய ஸ்பிரே விரைவில் வருகிறது

சனிக்கிழமை, 23 ஜனவரி 2021      உலகம்
Image Unavailable

உலகை ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு நிறுவனங்களின் தடுப்பூசி மருந்துகள் பயன்பாட்டிற்கு வந்துள்ளன. சில மருந்துகள் இறுதிக்கட்ட மருத்துவ பரிசோதனையில் இருக்கும்போதே சில நிபந்தனைகளுடன், அவசர கால பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன. இதேபோல் மூக்குவழியாக செலுத்தி கொரோனாவை அழிக்கக்கூடிய சில மருந்துகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 

அவ்வகையில் கனடாவின் வான்கூவரைச் சேர்ந்த சானோடைஸ் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் உருவாக்கி உள்ள நைட்ரிக் ஆக்சைட் நேசல் ஸ்பிரே மருந்தானது (என்.ஓ.என்.எஸ்.), 99.9 சதவீதம் செயல்திறன் மிக்கது என நிரூபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் உட்டா மாநில பல்கலைக்கழகத்தின் ஆன்டிவைரல் ஆராய்ச்சி மையத்தில் நடந்த பரிசோதனையில் செயல்திறன் உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதனையடுத்து அமெரிக்கா, கனடா, பிரிட்டன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில், மனிதர்களுக்கு இந்த மருந்தை செலுத்தி பரிசோதனை செய்யப்படுகிறது. இந்த பரிசோதனை 2-ம் கட்டத்தில் உள்ளது. இது நல்ல பலனை தருவதால், விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வரும் முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். 

பிரிட்டனில் உள்ள ஆஷ்போர்ட் மற்றும் செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவமனைகள் என்.எச்.எஸ். அறக்கட்டளை மூலம் இந்த மருந்தை மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதனை செய்யும் பணி வேகமாக நடைபெறுகிறது. எனவே, பிரிட்டனில் விரைவில் இந்த மருந்துக்கு அங்கீகாரம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

நைட்ரிக் ஆக்சைடை அடிப்படையாகக் கொண்ட இந்த மருந்தை மூக்கினுள் ஸ்பிரே செய்தால், கொரோனா வைரசானது நுரையீரலுக்குள் செல்வதற்கு முன்பாக அவற்றை அழித்துவிடுகிறது. மக்கள் வெளியில் செல்லும்போது முன்னெச்சரிக்கையாக இந்த மருந்தை மூக்கினுள் ஸ்பிரே செய்துகொள்ள வேண்டும். இப்படி செய்வதால், கொரோனா வைரஸ் உள்ளே நுழையாமல் தடுக்கப்படும். இதேபோல் தொண்டையில் மருந்து படும்படி வாய் கொப்பளித்தல், மூக்கு துவாரங்களில் மருந்தை செலுத்தி சுத்தம் செய்தல் போன்ற சிகிச்சையும் செய்ய முடியும். 

மனித உடலுக்குள் நைட்ரிக் ஆக்சைடின் முக்கியத்துவம் மற்றும் அதன் குணப்படுத்தும் பண்புகளை முதன்முதலில் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஃபெரிட் முராத் கண்டுபிடித்தார். இந்த கண்டுபிடிப்புக்காக அவர் உள்பட 3 பேராசிரியர்களுக்கு 1998 இல் மருத்துவத்திற்கான நோபல் பரிசு பகிர்ந்து வழங்கப்பட்டது. பேராசிரியர் முராத், சானோடைஸ் நிர்வாகக் குழுவில் உறுப்பினராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து