முருகப்பெருமானின் வரம் தி.மு.க.வுக்கு கிடைக்காது: வேலை கையில் பிடித்து கொண்டு வேஷம் போடுகிறார் ஸ்டாலின் -கோவை பிரச்சாரத்தில் முதல்வர் எடப்பாடி கிண்டல்

ஞாயிற்றுக்கிழமை, 24 ஜனவரி 2021      தமிழகம்
Edappadi 2020 11 19

Source: provided

கோவை - முருகனின் வரம் அ.தி.மு.க.வுக்குத்தான் கிடைக்கும் என்றும், வேலை கையில் பிடித்துக் கொண்டு, வேஷம் போடுகிறார் ஸ்டாலின் என்றும் கோவையில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார். 

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த 22-ம் தேதி இரவு கோவைக்கு தேர்தல் பிரச்சாரத்திற்காக வந்தார். முதல் நாளான நேற்று முன்தினம் மாநகர் மற்றும் புறநகரின் பல்வேறு இடங்களில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட அவர், தொடர்ந்து, இரண்டாவது நாளாக நேற்று (24-ம் தேதி) புலியகுளம் விநாயகர் கோவிலில் தரிசனம் செய்த பின்னர் தனது பிரச்சாரத்தை தொடங்கினார்.

முருகன் அருள் கிடைக்காது

புலியகுளத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசும் போது, தி.மு.க. தலைவர் ஸ்டாலின், வேலை கையில் எடுத்து விட்டார். கடவுளை இழிவாக பேசிய அவரது கையில் வேலை  கொடுத்து விட்டனர். நாம் மனதார பிரார்த்தனை செய்கிறோம். உண்மையாக இருக்கிறோம். ஸ்டாலின் உள்ளே ஒன்று பேசுவார், வெளியே ஒன்று பேசுவார். அவருக்கு கடவுள் அருள்புரிய மாட்டார். ஸ்டாலினுக்கு முருகன் வரம் கொடுக்க மாட்டார். முருகனின் வரம் அ.தி.மு.க.வுக்குத்தான் கிடைக்கும். பக்தர்களின் கோரிக்கையை அடுத்து தைப்பூசத்துக்கு பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க. அனைத்த மதங்களையும் சமமாக எண்ணுகிறது. தேர்தல் நெருங்கியதால் தி.மு.க.வினர் பகல் வேஷம் போடுகின்றனர் என்று பேசினார்.

வேஷம் போடும் ஸ்டாலின்

அடுத்து சிங்காநல்லூர் சந்திப்பில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசும் போது,  ஸ்டாலின் கையில் வேலை பிடித்துக் கொண்டு வேஷம் போடுகிறார்.  இயற்கையாக இறைப்பற்று உள்ளவர்களுக்கு தான் இறைவன் அருள் கிடைக்கும். தேர்தலுக்காக ஸ்டாலின் போடும் நாடகத்தை இறைவன் பார்த்துக் கொண்டிருக்கிறார். வரும் தேர்தலில் அவர்களுக்கு இறைவன் சரியான தீர்ப்பை கொடுப்பார். தேர்தல் வந்தால் அத்தனை நாடகங்களையும் போடக்கூடிய ஒரே தலைவர் தி.மு.க. தலைவர் ஸ்டாலின். கிராமசபைக் கூட்டம் என்ற பெயரில் நாடகத்தை ஏற்கனவே அரங்கேற்றி விட்டார்.

கோவையில் ஸ்டாலின் அரங்கேற்றிய நாடகம் மக்களிடம் எடுபடவில்லை. நாடகமாடி மக்களை ஏமாற்றி, மக்களை திசைதிருப்பி வெற்றி பெற திட்டமிட்டுள்ள ஸ்டாலின், செல்லும் இடங்களில் எல்லாம் பொய் கூறி வருகிறார். அது இத்தேர்தலில் நிச்சயம் எதிரொலிக்கும். அ.தி.மு.க. எதை செய்ய முடியுமோ அதை சொல்லும். எதை செய்தோமோ, அதை சொல்கிறோம். தி.மு.க. ஒரு அராஜகக் கட்சி. தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் அராஜகம் தலைவிரித்தாடும்.

அராஜகம், நில அபகரிப்பு, மின்வெட்டை தி.மு.க. கொண்டு வரும். மக்கள் தாக்குப் பிடிக்க முடியாத அளவுக்கு சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விடும். சட்டம் ஒழுங்கு சிறப்பாகவும், தடையில்லாத மின்சாரம் இரண்டும் இருக்கும் ஒரே மாநிலம் தமிழகம். தி.மு.க. ஆட்சியில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கவில்லை.

தி.மு.க. ஆட்சிக்கு வந்தால், அவரது குடும்பத்துக்கு மட்டும்தான் நன்மை கிடைக்கும். அ.தி.மு.க. ஆட்சியில் அனைத்து மக்களுக்கும் நன்மை கிடைக்கும். தில்லுமுல்லு செய்து, கொல்லைப்புறம் வழியாக ஆட்சிக்கு வர ஸ்டாலின் துடிக்கிறார். தி.மு.க. ஒரு வாரிசுக் கட்சி. தீயசக்தி தி.மு.க.வை நிராகரிப்போம். தி.மு.க.வை மக்கள் புறக்கணிக்க வேண்டும். தமிழகத்தில் 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படுகிறது. கேரளாவில் ஒரு யூனிட் மின்சார கட்டணம் ரூ.6. ஆண்டுக்கு சராசரியாக 8 ஆயிரம். 5 ஆண்டுகளுக்கு ரூ.40 ஆயிரம். இதை தமிழக அரசு ஒவ்வொரு குடும்பத்துக்கும் வழங்கியிருக்கிறது.

ஸ்டாலின் வீட்டுக்கும் இந்த சலுகை கிடைக்கிறது. கொரோனா காலத்தில் கட்சி வேறுபாடின்றி அனைத்து மக்களுக்கும் நலத்திட்ட உதவிகள் செய்தோம். அ.தி.மு.க.வுக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று பேசினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து