வேலூர் மாவட்ட தி.மு.க.வினர் போர்க்கொடி : துரைமுருகன் தேர்தலில் போட்டியிட எதிர்ப்பு?

செவ்வாய்க்கிழமை, 26 ஜனவரி 2021      தமிழகம்
25 ARASU 19

காட்பாடி.ஜன.26. உடல் நலத்தை கருத்தில் கொண்டு, வரும் சட்டசபை தேர்தலில், தி.மு.க., பொதுச்செயலர் துரைமுருகன், மீண்டும் காட்பாடி தொகுதியில் போட்டியிடாமல் இளைஞர்களுக்கு வழி விட வேண்டும் என வேலுார் மாவட்ட தி.மு.க.,வினர் கடிதம் வாயிலாக, கட்சி மேலிடத்திற்கு வலியுறுத்தி உள்ளனர்.

இதுகுறித்து தி.மு.க., நிர்வாகிகள் கூறியதாவது: துரைமுருகனுக்கு, வயதாகி விட்டது. அவரது மகன் கதிர்ஆனந்த் வேலுார் தொகுதி எம்.பி.,யாக உள்ளார். உடல் நலக்குறைவு காரணமாக, அடிக்கடி துரைமுருகன் மருத்துவமனையில் 'அட்மிட்' ஆகி, பரிசோதனை செய்து வருகிறார். அவரது உடல் நலத்தை கருத்தில் கொண்டு, வீட்டில் ஓய்வு பெற்று கட்சிக்கு ஆலோசனைகளை வழங்கி வரலாம். தேர்தலில் போட்டியிட்டால், அவர் பிரசாரத்திற்கு செல்வது கஷ்டமாக இருக்கும்.

எனவே இளைஞர்களுக்கு வழிவிடும் வகையில், தேர்தலில் போட்டியிடாமல் துரைமுருகன், கட்சி பணிகளை மட்டும் ஈடுபட வேண்டும். அது தான் அவரது உடல் நலத்திற்கு உகந்தது. இது தொடர்பாக, வேலுார் மாவட்ட நிர்வாகிகள், கட்சி மேலிடத்திற்கு கடிதம் வாயிலாக தெரிவித்துள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து