குடியரசு தின விழாவில் வீரதீர செயல்புரிந்த கால்நடை மருத்துவர், ஆசிரியை, ரயில் ஓட்டுநர் ஆகியோருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அண்ணா பதக்கம் வழங்கினார்.
72-வது குடியரசு தின விழா நேற்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தமிழக அரசு சார்பில் சென்னை மெரினா காமராஜர் சாலை காந்தி சிலை அருகே குடியரசு தின விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதக்கங்கள் மற்றும் பரிசுகளை வழங்கினார். வீரதீர செயல் புரிந்த 4 பேருக்கு அண்ணா பதக்கங்களை வழங்கினார். இதேபோல் பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கும் விருதுகள் மற்றும் பரிசுகளை வழங்கி கவுரவித்தார். சிறந்த காவல் நிலையங்களுக்கான பதக்கங்களையும் அவர் வழங்கினார். தொடர்ந்து விருதுகள் மற்றும் பதக்கங்களை பெற்றவர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
அதன்பிறகு மோட்டார் சைக்கிளில் போலீசாரின் சாகச நிகழ்ச்சிகள் வரிசையாக நடத்தப்பட்டன. 44 போலீசார் மோட்டார் சைக்கிள் சாகச நிகழ்ச்சிகளை நடத்தினார்கள். பின்னர் தென்னக பண்பாட்டு மையம் மற்றும் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த பாரம்பரிய கிராமிய கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
தமிழக அரசின் சாதனைகளை பறைசாற்றும் வகையில் ஒவ்வொரு அரசுத்துறை சார்பில் அமைக்கப்பட்டு இருந்த அலங்கார ஊர்திகளின் அணிவகுப்புகள் நடத்தப்பட்டன. மொத்தம் 17 துறைகளின் சார்பில் அணிவகுப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
9 மணிக்கு நிகழ்ச்சிகள் முடிந்ததும், அணிவகுப்பு தளவாய் விங்க் கமாண்டர் குஷால் கஜ்லாவை கவர்னருக்கு தலைமை செயலாளர் அறிமுகம் செய்து வைத்தார். அதன் பிறகு போலீஸ் பேண்ட் வாத்திய குழுவினரின் நாட்டுப்பண் இசைக்கப்பட்டது. அதன்பிறகு கவர்னர் அங்கிருந்து விடைபெற்று சென்றார்.
அதைத்தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். விழாவில் சபாநாயகர் தனபால், துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், ஐகோர்ட்டு தலைமை நீதிபதி பானர்ஜி, அமைச்சர்கள், வெளிநாட்டு தூதர்கள், அதிகாரிகள் திரளாக கலந்து கொண்டனர்.
ஒவ்வொரு குடியரசு தின விழாவின் போதும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டிருந்தன.
இதேபோல் தியாகிகளை கவுரவிக்கும் நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டு அவர்கள் வீடுகளுக்கு அதிகாரிகள் சென்று கவுரவித்தனர். இதேபோல் பொதுமக்களும் கொரோனா பரவல் காரணமாக அதிக அளவில் வரவில்லை. ஆனாலும் குடியரசு தின விழா கோலாகலமாகவே நடைபெற்றது.
வனயானைகளுக்கு சிறந்த சிகிச்சை அளித்ததற்காக கால்நடை மருத்துவர் பிரகாஷ், மாணவ-மாணவிகளின் உயிரை காப்பாற்றியதற்காக ராணிப்பேட்டை ஆசிரியை முல்லை, பனியிலும் சிறப்பாக ரயிலை செலுத்தியதற்காக மதுரை ஓட்டுநர் சுரேஷ் ஆகியோர் முதல்வரிடம் இருந்து அண்ணா பதக்கத்தை பெற்றனர்.