விவசாயிகளுக்கு ஆதரவாக டிராக்டரில் மணமகளுடன் ஊர்வலமாக வந்த குமரி பொறியாளர்

செவ்வாய்க்கிழமை, 26 ஜனவரி 2021      தமிழகம்
Jerin-Pubby 2021 01 26

மத்திய அரசின் வேளாண் திருத்த சட்டங்களை திரும்ப பெறக்கோரி டெல்லியில் கடந்த 60 நாட்களுக்கு மேலாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த போராட்டத்தின் ஒரு கட்டமாக, டெல்லியில் நேற்று டிராக்டர் பேரணியும் நடந்தது. விவசாயிகளுக்கு ஆதரவாக ஒவ்வொருவரும் தனிப்பட்ட முறையில் தங்களது ஆதரவை தெரிவித்து வரும் நிலையில், குமரி மாவட்டம் அருமனை அருகே பொறியாளர் ஒருவர், தனது திருமணத்தின் போது டிராக்டரில் மணமகளுடன் ஊர்வலமாக வந்து, விவசாயிகளின் போராட்டத்துக்கு தனது ஆதரவை தெரிவித்தார்.

குமரி மாவட்டம் அருமனை அடுத்த மாங்கோடு ஊராட்சி அம்பலக்காலை பகுதியை சேர்ந்தவர் ஜெரின். கட்டிட பொறியாளர். இவருக்கும், கொல்லங்கோடு அருகே உள்ள பாத்திமா நகரை சேர்ந்த பபி  என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு, இவர்களின் திருமணம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த திருமணத்தின் போது மணமக்கள் இருவரும் அலங்கரிக்கப்பட்ட டிராக்டரில் ஊர்வலமாக வந்தனர். வாழை குலைகள், வைக்கோல், பலாப்பழம் ஆகியவற்றால் டிராக்டர் அலங்கரிக்கப்பட்டு ஜெரின், பபி ஆகியோர் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர். இதில் ஏராளமான பொதுமக்களும் கலந்து கொண்டு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர். மண்டபத்தில் இருந்து மணமகள் இல்லத்துக்கு, டிராக்டரிலேயே சென்று விட்டு, மீண்டும் மணமகன் இல்லத்துக்கு டிராக்டரில் தான் வந்தனர். 

விவசாயிகள் தங்களது கோரிக்கைக்காக கடும் பனி, வெயிலை கூட பொருட்படுத்தாமல் போராடி வருகிறார்கள். அவர்களுக்கு ஏதாவது ஒரு வழியில் ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் இருந்தது. அந்த வகையில் தான் திருமணம் முடிந்ததும், விவசாயிகளின் போராட்டத்தை நினைவுப்படுத்தும் வகையில் டிராக்டரில் ஊர்வலமாக வந்தோம் என மணமகன் ஜெரின் கூறினார். தற்போது சமூக வலை தளங்களிலும் இது வெளியாகி பாராட்டுக்கள் குவித்து வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து