பொதுத்தேர்வு இந்தாண்டு எளிய முறையில் நடைபெறும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
தமிழகத்தில் கொரோனா பரவலால் கடந்த மார்ச் மாதம் முதல் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இருப்பினும் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தற்போது கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில், தமிழகத்தில் பள்ளிகளை திறக்க தமிழக அரசு முடிவு எடுத்தது. இதன்படி பெற்றோரிடம் கருத்து கேட்பு நடத்தப்பட்டு கடந்த 19-ம் தேதி முதல் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு நடைபெற்று வருகிறது.
இருப்பினும், 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நெருங்கி வருவதால் மாணவர்களின் நலன் கருதி பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்தது. அதே சமயம் கொரோனா காரணமாக பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்படாது என்றும் திட்டவட்டமாக தெரிவித்தது.
இந்நிலையில் சென்னை கடற்கரைச் சாலையில் உள்ள சாரண, சாரணியர் தலைமை அலுவலகத்தில் நேற்று குடியரசு தின விழா நடைபெற்றது. இதில் அமைச்சர் செங்கோட்டையன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தேசியக் கொடியேற்றி வைத்தார். தலைமைப் பண்பு குறித்து பயிற்சி ஆசிரியர்களுக்குச் சான்றிதழ்களையும் அவர் வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், சாரண- சாரணியர் இயக்கத்துக்கு நடப்பாண்டில் ரூ. ஒரு கோடி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக இந்த ஆண்டு நடைபெறும் பொதுத்தேர்வு நடைமுறையில் மாற்றங்கள் கொண்டு வரப்படும். என்னென்ன மாற்றங்களைக் கொண்டு வரவேண்டும் என்பது குறித்து முதல்வரிடம் கலந்து பேசியிருக்கிறோம். இன்னும் இதுகுறித்து ஆசிரியர்கள், கல்வியாளர்கள், பெற்றோரிடம் கருத்துக் கேட்டு வருகிறோம்.
மாணவர்கள், ஆசிரியர்கள் எதிர்பார்ப்பது போல எளிய வகையில் தேர்வுகள் இருக்கும். சட்டப்பேரவைத் தேர்தல் விரைவில் வர உள்ளதால், பொதுத்தேர்வுத் தேதிகள் குறித்துத் திட்டமிட்டு வருகிறோம். பொதுத்தேர்வில் கொண்டுவரப்படும் மாற்றங்கள் குறித்து முதல்வரின் அனுமதி பெற்று அறிவிப்பு வெளியாகும். மேல்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளும் திறக்கப்பட வேண்டும் என்றே பெற்றோர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். விரைவில் அதுகுறித்தும் அறிவிப்பு வெளியிடப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
கொரோனா பாதிப்பு காரணமாக 10 மாதங்களுக்குப் பிறகே பள்ளிகள் திறக்கப்பட்டன. இதனால் ஏற்பட்ட கற்றல் இழப்பால் 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்குப் பாடத்திட்டங்களும் 40 சதவீத அளவுக்குக் குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.